மகனைப் பாராட்டுவதில் காட்டும் அக்கறையில் துளியளவேனும் தமிழகப் பிள்ளைகளின் பாதுகாப்பில் முதலமைச்சர் காட்ட வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனத்தைப் போதை இளைஞர்கள் கல்லைக் கொண்டு தாக்கியதும் உள்ளே மாணவர்கள் அலறும் காணொளி வெளியாகியுள்ளது. அதேபோல இன்று ஒரு நாள் மட்டும் 4 போக்சோ குற்றங்கள் உட்பட 6 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதையெல்லாம் தாங்கள் அறிவீர்களா? அதிலும் தஞ்சாவூர், ஈரோடு, நாமக்கல், கோவை, மதுரை என மாவட்ட வித்தியாசமின்றி குற்றங்கள் நடந்துள்ளது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கோ, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்போ பெயரளவுகூட இல்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
ஆனால் தாங்களோ முரசொலியை மட்டும் படித்துவிட்டு “நாடு போற்றும் நல்லாட்சி இது” என்று நாற்புறமும் பெருமை பேசி வருகிறீர்கள். பல குழந்தைகளும் பெண்களும் பாதுகாப்பின்றி அலறிய வேளையில், தாங்களோ உங்கள் மகனும் துணை முதல்வருமான உதயநிதியை மனமுருகிப் பாராட்டிக் கொண்டிருந்தீர்கள்! இது முறையா முதல்வரே?
தங்கள் மகனைப் பாராட்டுவதில் தாங்கள் காட்டும் அக்கறையில் துளியளவேனும் தமிழகப் பிள்ளைகளின் பாதுகாப்பில் காட்டுங்கள். தமிழகம் அமைதிப்பூங்காவாகத் தானாக உருமாறிவிடும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
















