கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பாகுபலி யானையை வாகனத்தில் துரத்தும்போது ஏற்பட்ட மோதலில் காயம் ஏற்படவில்லை என வனத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த பாகுபலி காட்டு யானையின் காலில் வனத்துறையினரின் ஜீப் மோதியது. அதனைத்தொடர்ந்து யானையை துரத்திச் சென்று வனப் பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டி அடித்தனர்.
இச்செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பாகுபலி யானையை வாகனத்தில் துரத்தும்போது ஏற்பட்ட மோதலில் காயம் ஏற்படவில்லை என வனத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாகுபலி யானை இருக்கும் இடத்தை வண்டியில் சென்று பார்த்தபோது, யானையானது வனச்சரக வாகனத்தை தந்தத்தை வைத்து தள்ள முயற்சித்ததாகவும், அப்போது வனப்பபணியாளர்கள் வாகனத்தில் சைரன் எழுப்பியும், சத்தமிட்டும் யானையை விரட்ட முயற்சித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
யானையின் முன்பக்கம் மரம் மற்றும் கட்டிடங்கள் இருந்ததால், யானையிம் பின்பகுதி வாகனத்தில் உரசியதாகவும், அதனைத்தொடர்ந்து பாகுபலி யானையை கண்காணித்து அருகிலிருந்த வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வனப் பணியாளர்களுக்கோ, பாகுபலி யானைக்கோ எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
















