25 ஆண்டுகளுக்கு முன்பு 4 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த உத்தராகண்ட் மாநிலத்தின் பட்ஜெட், ஒரு லட்சம் கோடியை எட்டியுள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலம் உருவாகி 25 ஆண்டுகள் நிறைவையொட்டி, டேராடூனில் சுமார் 8 ஆயிரத்து 140 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
குடிநீர் வசதி, நீர்ப்பாசனம், தொழில்நுட்ப கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்த அவர், பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 28 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் விதமாக அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாகக் காப்பீட்டு தொகையை செலுத்தினார்.
இதையடுத்து, வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியுடன் சேர்ந்து நினைவு தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.
பின்னர் விழா மேடையில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆன்மிக வளம் மிக்க மாநிலமாக உத்தராகண்ட் திகழ்வதாகத் தெரிவித்தார்.
உத்தராகண்ட் மாநிலத்தின் உண்மையான அடையாளம், அதன் ஆன்மிக ஸ்தலங்களில் உள்ளதாகக் கூறிய பிரதமர் மோடி, 25 ஆண்டுகளுக்கு முன்பு 4 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த உத்தராகண்ட் மாநிலத்தின் பட்ஜெட், ஒரு லட்சம் கோடியை எட்டியுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், மாநிலத்தின் வளர்ச்சியைப் புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல இரட்டை எஞ்சின் பாஜக அரசு கடுமையாக உழைப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
இதைத்தொடர்ந்து, டேராடூனில் பிரதமர் மோடி வாகன பேரணி நிகழ்த்தினார். அப்போது, சாலையோரம் நின்றிருந்த மக்கள், பிரதமர் மோடியை கண்டு உற்சாகமுடன் கைகளை அசைத்தனர்.
















