பிலிப்பைன்ஸ் நாட்டில் கல்மேகி புயலை தொடர்ந்து உருவான ஃபங்-வோங் புயல் தற்போது கரையை கடந்துள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பைத் தற்போது பார்க்கலாம்.
அண்மையில் பசிபிக் பெருங்கடலில் உருவான கல்மேகி புயல் பிலிப்பைன்ஸ் நாட்டின் பல பகுதிகளை முற்றிலும் உருக்குலைத்தது. கடுமையான வெள்ளப்பெருக்கால் பல்வேறு நகரங்கள் நீரில் மூழ்கின. புயல் பாதிப்பு காரணமாகச் சுமார் 5 லட்சம் மக்கள், வேறு பகுதிக்கு இடம்பெயர வேண்டிய சூழலும் ஏற்பட்டது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் கல்மேகி புயல் காரணமாக 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 109 பேர் மாயமானதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்தது. மேலும், அந்தப் புயலை தேசிய பேரிடராகவும் அறிவித்தது. இப்படி பெரும் சேதத்தை ஏற்படுத்திய கல்மேகி புயல் 2 நாட்களுக்கு முன்பு கரையை கடந்தது.
இதனால், பிலிப்பைன்ஸ் மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். ஆனால், அந்த நிம்மதி பெருமூச்சு அதிக நேரம் நீடிக்கவில்லை. அதற்குள்ளாகவே, பிலிப்பைன்ஸை மற்றொரு சக்தி வாய்ந்த புயல் தாக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஃபங்-வோங் எனப் பெயரிடப்பட்ட அந்தப் புயல் பிலிப்பைன்ஸின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரும் எனவும், குறைந்தது 5 மீட்டர் உயரம் வரை அலைகள் எழக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
இதனையடுத்து, மீண்டும் ஒரு புயலை எதிர்கொள்ள அந்நாட்டு அரசும், மக்களும் தயாராகினர். பிகோல் பகுதியில் அதிகபட்சமாக 200 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டதால், அங்குத் தேசிய மீட்புப்படை வீரர்கள் நூற்றுக்கணக்கில் முகாமிட்டனர். மறுஎச்சரிக்கை வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லச் செல்ல வேண்டாம் எனவும், பொதுமக்களுக்கும் கடல்பகுதிகளுக்கு செல்வதை தடுக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டது.
ஃபங்-வோங் புயல் காரணமாகப் பிலிப்பைன்சின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் இருந்து சுமார் ஒரு லட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அத்துடன், தென்கிழக்கு லூசோன் பகுதிக்கு 5ம் எண் எச்சரிக்கையும், மணிலா உள்ளிட்ட பகுதிகளுக்கு 3ம் எண் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
Fung-wong புயல் கரையை நெருங்க நெருங்க 185 கிமீ முதல் 230 கிமீ வரையிலான வேகத்தில் காற்று வீசியதால் பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்பைச் சந்தித்தன. கல்மேகி புயலின்போது ஏற்பட்டதை போலவே, பல பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
பலத்த காற்று காரணமாக, கிழக்கு விசயாஸின் பகுதிகளில் உள்ள பல இடங்களில் முழுவதும் மின் விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில், 300க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் Fung-wong புயல் ஒரு வழியாகக் கரையை கடந்தது. இந்தப் புயலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பாதிப்பு நிலவரம்குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
















