காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேகதாது அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்படும் என வாதிட்டார்.
மேலும், உச்சநீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் கூட தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை தர கர்நாடகா அரசு மறுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனை பதிவு செய்த உச்சநீதிமன்றம், மாநிலங்களுக்கிடையே நிலவும் நதிநீர் பிரச்னைகள் எந்த காலத்திலும் முடிவடையப் போவதில்லை என அதிருப்தி தெரிவித்தது.
மேலும், மேகதாது அணைக்கு திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடகா அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், விரிவான திட்ட அறிக்கை மீது மத்திய நீர்வள ஆணையம் முடிவெடுப்பதற்கு முன்பு தமிழக அரசின் அனுமதியை கட்டாயம் கேட்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
தொடர்ந்து, காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், மேகதாது அணை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் முடித்து வைத்தது.
















