அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் சந்திப்பு நடத்த வேண்டும் என்பதற்காக 444 கோடி ரூபாய் வரை பாகிஸ்தான் செலவழித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதன் காரணமாகவே ஷெபாஷ் ஷெரீப் மற்றும் அசிம் முனீரை சந்திக்க ட்ரம்ப் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இயல்பாகவே வணிக ரீதியாகச் சிந்திக்க கூடியவர். அவர் இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பின், இந்தியா, சீனா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குக் கூடுதல் வரி விதித்ததை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இந்தியா போன்ற இறையாண்மை மிகுந்த நாடுகளுக்கு, ட்ரம்ப்பின் நடவடிக்கையை எதிர்க்கும் துணிச்சல் இருந்தாலும், பாகிஸ்தான் போன்ற நாடுகள் அண்டி பிழைக்கும் சூழல் தான் உருவாகி இருக்கிறது. அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டுவதன் மூலம், இந்தியாவை பயமுறுத்தலாம் என பாகிஸ்தான் நினைத்துக் கொண்டிருக்கிறது.
ஆனால், ட்ரம்புக்கோ பாகிஸ்தான் மீது கரிசனம் எல்லாம் இல்லை. அவரைப் பொறுத்தவரையில், வேற்று நாட்டு தலைவர்களுடன் ஏதாவது ஒரு ஆதாயத்துடன் மட்டுமே சந்திப்பே நடத்துவார். அவருக்கோ அவரின் ஆதரவாளர்களுக்கோ சாதகமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதாக இருந்தால் மட்டுமே வெள்ளை மாளிகை கதவே திறக்கும். இப்படி அணிபணிந்து சென்றதால் தான், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்பும், பீல்டு மார்ஷல் அசிம் முனீரும், அமெரிக்க அதிபரைச் சந்திக்க முடிந்ததாகச் சர்வதேச அரசியலை கூர்ந்து கவனிப்பவர்கள் தெரிவிக்கிறார்கள்.
முன்னாள் அதிபர் ஜோ பைடனை பொறுத்தவரையில், பாகிஸ்தானை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை. பயங்கரவாதத்தை தூண்டி விடும் பாகிஸ்தானை கூட்டாளியாக வைத்துக்கொண்டு, யார் பழிச்சொல்லை சுமப்பது என்பதை நன்கு உணர்ந்திருந்தார் . ட்ரம்ப் அதிலிருந்து மாறுபட்டு இருப்பதால் மட்டுமே, பாகிஸ்தானால் நெருக்கம் காட்ட முடிவதாகச் சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அதாவது, 444 கோடி ரூபாய் வரை செலவழித்ததால் மட்டுமே ஷெபாஷ் ஷெரீப்புடனும், அசிம் முனீருடனும் கைகுலுக்க சம்மதித்திருக்கிறார் டொனால்டு ட்ரம்ப்.
அமெரிக்க அரசு நிர்வாகத்தில் அனைத்து மட்டத்திலும் லாபி செய்வதற்காகவே, சில நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தலைவர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்வது தொடங்கி வணிகம், பாதுகாப்புத்துறை சார்ந்த ஒப்பந்தங்களை மேற்கொள்வது வரை இந்த நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதில் ஒன்றாக தான், மான்ஹாட்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Seiden Law LLP நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில், JAVELION ADVISORS எனப்படும் ட்ரம்ப் ஆதரவு நிறுவனமும் முதலீட்டாளராக இருக்கிறது. எனவே, Seiden Law LLP நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டால் ட்ரம்பை சந்திக்க முடியும் எனப் பாகிஸ்தான் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன் அடிப்படையிலேயே, பாகிஸ்தானுக்கும், Seiden Law LLP நிறுவனத்துக்கும் கடந்த ஏப்ரல் 8ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானதாகக் கூறப்படுகிறது. இதுமட்டுமல்ல, ORCHID ORGANISERS நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, அமெரிக்காவின் வரி விதிப்பு பாதிப்பில் இருந்து பாகிஸ்தான் தப்பியது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. ஆரம்பத்தில், பாகிஸ்தானுக்கு 29 சதவீதம் வரி விதிக்க திட்டமிட்டிருந்த டொனால்டு ட்ரம்ப், ORCHID ORGANISERS நிறுவனம் உடனான ஒப்பந்தத்திற்கு பின், 19 சதவீதம் மட்டும் வரி விதித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா – பாகிஸ்தான் இடையிலான கனிமவள ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்ததும் இந்த நிறுவனம் தான் என்ற உண்மை விவரம் வெளிவந்துள்ளது. இப்படி, கைகாலில் விழுந்தாவது, அமெரிக்காவின் நட்பை பெற்றுவிட வேண்டும் என 444 கோடி ரூபாய் வரை செலவிட்ட பாகிஸ்தான் செயலை கண்டு சர்வதேச அரசியல் வல்லுநர்கள் நகைப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அமெரிக்க தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுகள் நடத்த இந்தியா செலவிடும் நிதியை விட இது மும்மடங்கு அதிகம் எனவும் குறிப்பிடுகிறார்கள்.
















