தங்கம் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து வருவதால் போதுமான பணி ஆணை இல்லாமல் 10 ஆயிரம் பொற்கொல்லர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டனர். எங்கே நடந்தது இந்தச் சம்பவம்? பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் ஏணி மேல் ஏணி வைத்து ஏறிக் கொண்டிருக்கும் தங்கம் விலை சாதாரண மக்களுக்கு எட்டாக் கனியாக மாறிக் கொண்டிருக்கிறது. இதனால் தங்கம் விற்பனை குறைவதோடு அவற்றின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தங்கத்தை உற்பத்தி செய்யும் பொற்கொல்லர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பாதிப்பு கோவையிலும் எதிரொலித்துள்ளது.
தொழில் நகரான கோவை, தங்க நகை தயாரிப்பிலும் தேசிய அளவில் புகழ் பெற்றுள்ளது. 40 ஆயிரம் பொற்கொல்லர்கள் உட்பட சுமார் ஒரு லட்சம் பேர் வரை இத்தொழிலில் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர். ஆனால் தங்கத்தின் விலை தற்போது வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதால் நகைகளுக்கான பணி ஆணை பாதிக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டுக்குப் பின் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மத்திய அரசு தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரியை 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைத்துள்ளது. ஜிஎஸ்டி வரி 3 சதவீதம் விதிக்கப்படுகிறது. ஆனாலும் உலக சந்தை நிலவரத்துக்கு ஏற்பத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கோவை நகரில் சராசரியாக நாளொன்றுக்கு 200 கிலோ அளவுக்குத் தங்க நகை வணிகம் நடைபெற்று வந்தது. ஆனால் இப்போது அப்படியில்லை. தொடரும் விலை உயர்வால் தங்க நகை தயாரிப்புத் தொழில் முற்றிலும் முடங்கியுள்ளதாகத் தொழிலாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
மேலும் கோவையில் மொத்தம் 40 ஆயிரம் பொற்கொல்லர்கள் உள்ளனர். தற்போது நிலவும் நெருக்கடியான சூழல் காரணமாக 10 ஆயிரம் பேர் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். தாறுமாறாக உயரும் தங்கத்தின் விலையால் வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல, உற்பத்தியாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் தங்க நகை உற்பத்தியையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள பொற்கொல்லர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.
















