பீகார் தேர்தலில், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் சூறாவளி பிரசாரம், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றியை வாரி வழங்கியிருக்கிறது. மறுபுறம், அகிலேஷ் யாதவை பிரசார பீரங்கியாகக் களமிறங்கிய ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்திருக்கிறது. யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ் ஆகிய இருவரில் யாருக்கு வின்னிங் ஸ்டிரைக் ரேட் அதிகம். பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
பீகார் சட்டப்பேரவை தேர்தல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மேலும் ஒரு வெற்றி கோப்பையைப் பரிசளித்திருக்கிறது. மறுபுறம் எதிர்த்துப் போட்டியிட்ட ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணி இதுவரை இல்லாத அளவுக்கு மண்ணை கவ்வியிருக்கிறது. பீகார் சட்டமன்ற தேர்தலில் மகுடம் சூட, இரு கூட்டணிகளும் நட்சத்திர பிரச்சாரகர்களை களமிறக்கிய நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி மட்டுமே, வெற்றியை அறுவடை செய்திருக்கிறது. இண்டி கூட்டணி தலைவர்களைக் கொண்டு ஆர்ஜேடி – காங்கிரஸ் நடத்திய பரப்புரைகளை, பீகார் மக்கள் வேடிக்கையாகக் கடந்து சென்றதையே தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்குப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் பிரசாரங்களை தாண்டி, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் பரப்புரை, பெரிதும் கைக்கொடுத்திருக்கிறது என்றே கூற வேண்டும்.
யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் மேற்கொண்ட 31 தொகுதிகளில், 27 வேட்பாளர்கள் வெற்றி கனியைச் சுவைத்திருப்பதன் மூலம் இது நிரூபணமாகிறது. மற்ற தொகுதிகளிலும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே என்டிஏ வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மறுபுறும், உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்துக்கு போட்டியாளராகக் கருதப்படும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் வின்னிங் ஸ்டிரைக் ரேட் படுபாதளத்தில் உள்ளது.
மகாகத்பந்தன் கூட்டணியின் பிரச்சார பீரங்கியாக அறியப்பட்ட அகிலேஷ் யாதவ் , 22 இடங்களில் பரப்புரை மேற்கொண்டு இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றியை வாங்கி தந்திருக்கிறார். ராம்கார் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதன் மூலம், மாயாவதியின் பிரசாரத்திற்கு கூடப் பீகாரில் கொஞ்சம் மவுசு இருப்பது உறுதியாகியிருக்கிறது. யோகி ஆதித்யநாத்தின் பிரச்சாரம் பீகார் மக்களின் மனதை தொட்டதற்கு, இண்டி கூட்டணி தலைவர்கள்மீது அவர் வைத்த குற்றச்சாட்டுகள் ஓர் முக்கிய காரணம் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள் . குறிப்பாக, ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகிய மூவரையும் காதுகேளாத, கண் தெரியாத, வாய்பேசாத குரங்குகள் என யோகி ஆதித்யநாத் விமர்சித்தது வாக்காளர்களின் கவனத்தை பெற்றதாகக் குறிப்பிடுகிறார்கள்.
யோகி ஆதித்யநாத் இந்துத்துவா கொள்கையைக் கையில் எடுத்ததும், மக்களின் கவனத்தை பெற்றதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால், தேஜஸ்வி யாதவ், யோகி ஆதித்யநாத்தின் குற்றச்சாட்டுக்குப் பதிலடி மட்டுமே கொடுத்து வந்ததாகவும், அடிப்படை பிரச்னைகளை பேசத் தவறிவிட்டதாகவும் விளக்கம் அளிக்கிறார்கள். 2027-ம் ஆண்டில் உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கும் கூட இதே போக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.
















