மேகதாது திட்டத்தைச் செயல்படுத்த அனுமதி வழங்க வேண்டும் எனப் பிரதமர் மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பிய கடிதத்தில், காவிரி ஆற்றில் மேகதாது திட்டத்தை செயல்முறைபடுத்துவது தொடர்பாகத் தமிழக அரசின் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது எனவும், இத்திட்டத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்க, மத்திய நீர் ஆணையத்துக்கு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது எனவும் சித்தராமையா சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே திட்டத்தை செயல்முறைபடுத்த மத்திய நீர் ஆணையத்துக்கு, உரிய வழிகாட்டுதல்களை பிறப்பித்து அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் சித்தராமையா தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், கிருஷ்ணா மேலணை திட்டத்துக்கு மத்திய அரசு சார்பில் 5 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மானியம் அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய சித்தராமையா, தேசிய நீர் மேம்பாட்டு முகமை, நதிகள் இணைப்பு திட்டத்தின் கீழ், கர்நாடகாவுக்கு நியாயமான நீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
















