புதிய வகுப்பறைகள் கட்டித்தரப்படும் என்று கூறி அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திமுக அரசு ஒதுக்கிய சுமார் ரூ.12,300 கோடி நிதி எங்கே? என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள அரசுத் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித் தருவதாகக் கூறி அப்பகுதி கவுன்சிலர் தொடக்கப்பள்ளியின் வகுப்பறைகளை இடித்ததாகவும், ஆனால் நான்கு வருடங்களுக்கு மேலாகியும் வகுப்பறை கட்டித் தராததால் பிள்ளைகள் கோவில் வளாகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள காணொளி கடும் அதிர்ச்சியளிக்கிறது.
இப்படித் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிப்பதும், கோவில் வளாகத்தில் வகுப்பறைகள் நடப்பதும், கொளுத்தும் வெயிலில் பிள்ளைகள் அமர வைக்கப்படுவதும் அன்றாடச் செய்திகளாகிவிட்ட நிலையில், புதிய வகுப்பறைகள் கட்டித்தரப்படும் என்று கூறி அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திமுக அரசு ஒதுக்கிய சுமார் ரூ.12,300 கோடி நிதி என்னவாயிற்று? தமிழகத்தின் கல்வியமைப்பை இப்படி மொத்தமாக சீரழித்து விட்டு “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற விளம்பர விழா எடுத்துத் தங்களுக்குத் தாங்களே பொய் பாராட்டு பத்திரம் வாசித்துக் கொள்ள திமுக தலைவர்களுக்கு உறுத்தவில்லையா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
















