ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மோடி புட்டபர்த்திக்கு வருகை தந்தார்.தொடர்ந்து, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் மகா சமாதிக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு வழிபாடு மேற்கொண்டார்.
அப்போது, அங்கிருந்த அர்ச்சகர்கள் மற்றும் வேத விற்பன்னர்கள் வேத மத்திரங்கள் முழங்கப் பிரதமர் மோடியை ஆசீர்வதித்தனர். இதனையடுத்து, நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கண்டு களித்தனர்.
பின்னர், ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவில், சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை, போதனைகள் மற்றும் அவரது சிறப்பைக் கௌரவிக்கும் வகையில் நினைவு நாணயத்தையும், அஞ்சல் தலையையும் பிரதமர் மோடி வெளியிட்டுப் புகழஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண், மத்திய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு, கிஷண் ரெட்டி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
















