மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயித்த விவகாரத்தில், குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
தமிழக அரசு அனுப்பிய பல்வேறு மசோதாக்கள் மீது ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்ட கால வரம்புக்குள் உரிய முடிவு எடுக்கவில்லை என கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு விதித்து உத்தரவிட்டது.
இதனையடுத்து கால வரம்பு நிர்ணயிக்கும் நிபந்தனைகள் அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாதபோது, உச்சநீதிமன்றம் எப்படி இத்தகைய தீர்ப்பை வழங்கியது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளை முன்வைத்து விளக்கம் கேட்டிருந்தார்.
அந்த கேள்விகள் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 10 நாட்கள் நடைபெற்ற நிலையில், வழக்கின் தீர்ப்பு கடந்த செப்டம்பர் 11-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல்.S.சந்தூர்கர் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
















