கள்ள ஓட்டு திமுகவுக்கு இன்னும் 4 அமாவாசைதான் இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளில் திமுகவுக்கு ஆதரவாகச் செயல்படும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், பாலகங்கா, விருகை ரவி, ஆதிராஜாராம், தி.நகர் சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், SIR பணிகள் 2002ஆம் ஆண்டு திமுக மத்திய அரசுக்கு ஆதரவு கொடுத்த காலத்தில் கொண்டுவரப்பட்டது என்றும், அன்றைக்கு வாயை மூடிக்கொண்டு இருந்த ஸ்டாலின் தற்போது எதிர்க்கிறார் எனவும் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் நியாயமாக நடத்த வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது எனக்கூறிய ஜெயக்குமார், திமுக கள்ள ஒட்டை நம்பியே உள்ளது என விமர்சித்தார்.
















