கோவை வால்பாறையைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவி ஒருவர், பள்ளி ஆசிரியர்கள் திட்டியதால் மனமுடைந்து தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் நெஞ்சை கனக்கச் செய்வதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லி தேற்றுவதென்றே தெரியவில்லை. படிக்கின்ற வயதில் தற்கொலை எண்ணம் வருமளவிற்கு நமது பிள்ளைகள் பலவீனம் அடைந்துவிட்டார்களா என்று நினைக்கையில் உள்ளம் வெம்பிப் போவதாக கூறியுள்ளார்.
எத்தனை துயரங்கள் மலைபோல நம் கண்முன்னே எழுந்தாலும், தற்கொலை என்பது எதற்கும் முடிவானது இல்லை என்பதை இளம் தலைமுறையினரின் மனதில் அழுந்தப்பதிக்க நாம் தவறிவிட்டோமோ என்ற குற்றவுணர்வு எழுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூகத்தின் எதிர்காலத் தூண்கள் நமது கண்முன்னே இப்படி சரிந்து போவது பெரும் ஆபத்தானது. எனவே, குழந்தைகள் மீது ஆளும் அரசும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் பொதுமக்களும் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என ஒரு தகப்பனாக வேண்டுகோள் விடுக்கிறேன்.
பஞ்சு போன்ற குழந்தைகள் மனதை எப்படி இலகுவாகக் கையாள வேண்டும் என்பது குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என்பதை ஒரு அரசியல் தலைவராக ஆளும் அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
















