போர்நிறுத்தத்திற்கான தனது திட்டத்தை ஜெலன்ஸ்கி ஏற்கவில்லை என்றால், அவரது போராட்டங்கள் அனைத்தும் பயனற்றதாக முடியும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்..
2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய ரஷ்யா உக்ரைன் போர், தற்போது 4வது ஆண்டை நோக்கிச் சென்றுகொண்டுள்ளது. இந்தப் போரில் ரஷ்யா மிக எளிதில் வெற்றிபெற்றுவிடும் எனத் தொடக்கத்தில் கருதப்பட்டது.
ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு காரணமாக, உக்ரைன் இன்றுவரை ரஷ்யாவை எதிர்த்துப் போராடி வருகிறது. உக்ரைன் போர் தொடங்கியபோது அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி வகித்தார். அவர், உக்ரைனுக்கு தேவையான நிதி மற்றும் ராணுவ உதவிகளை செய்துகொடுப்பது என்ற முடிவில் திடமாக இருந்தார்.
ஆனால், ட்ரம்பிற்கு தொடக்கம் முதலே அதில் உடன்பாடில்லை. தனது தேர்தல் பிரச்சாரத்தில் கூட இந்த விவகாரத்தை முக்கிய பேசுபொருளாக அவர் கொண்டிருந்தார். அமெரிக்க மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும், ஆகவே போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தற்போதும் அவர் அதே நிலைப்பாட்டில்தான் உள்ளார். உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த அவர், தற்போது 28 அம்ச திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார். இதனை உக்ரைன் ஏற்கும்பட்சத்தில் போர் உடனடியாக முடிவுக்கு வரும். ஆனால், அந்தத் திட்டம் தங்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக உக்ரைன் கருதுகிறது. குறிப்பாக, உக்ரைனின் ஆயுதப்படை வீரர்களின் எண்ணிக்கை 6 லட்சமாகக் குறைக்கப்படும், நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்க்கப்படாது, உக்ரைனில் நேட்டோ படைகள் நிறுத்தப்படாது, உக்ரைன் அணுசக்தி இல்லாத நாடாக இருக்கும் போன்ற அம்சங்கள் அந்தத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, உக்ரைன் தனது வசமுள்ள டான்பாஸ் நகரை ரஷ்யாவுக்கு வழங்க வேண்டும் எனவும் அந்த 28 அம்ச திட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன. இவற்றை ஏற்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தயாராக இல்லை. இந்தத் திட்டம் தொடர்பாகப் பேட்டியளித்த டிரம்ப், போர்நிறுத்தத்திற்கான இந்தத் திட்டங்களை ஜெலன்ஸ்கி ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்தத் திட்ட வரைவு இறுதியானதல்ல எனவும், பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார். தனது முன்மொழிவை ஜெலன்ஸ்கி ஏற்கவில்லை என்றால், அவர் எவ்வளவுதான் போராடினாலும், அந்த முயற்சியெல்லாம் பயனற்றதாகத்தான் முடியும் எனவும் டிரம்ப் தெரிவித்தார்.
இந்த அமைதி திட்டம் முன்மொழியப்பட்டதில் இருந்து ஜெலன்ஸ்கி ட்ரம்பிடம் பேசவில்லை. வரும் நாட்களில் குடியரசு கட்சியின் தலைவர்களுடன் அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் பேட்டியளித்த ஜெலன்ஸ்கி, உக்ரைன் மிகவும் கடினமாகத் தேர்வை எதிர்கொண்டுள்ளதாகக் கூறினார். தங்களின் கண்ணியத்தையோ, அல்லது தங்களின் நெருங்கிய கூட்டாளியையோ இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் அப்போது குறிப்பிட்டார்.
ஏற்கனவே, ஜெலன்ஸ்கி மீது 100 மில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது இந்த 28 அம்ச திட்டத்தையும் அவர் ஏற்றுக்கொண்டால் அவருக்குப் பெரும் பின்னடைவு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் பொருளாதார நிபுணரான கான்ஸ்டன்டைன் சோனின், ட்ரம்பின் முன்மொழிவை ஜெலன்ஸ்சி ஏற்றால் அவரது அரசு கவிழும் சூழல் ஏற்படும் என எச்சரித்துள்ளார். இந்தச் சூழலில் ஜெலன்ஸ்கி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கான விடை ஓரிரு வாரங்களில் தெரிந்துவிடும்.
















