நாடு முழுவதும் உள்ள மாவோயிஸ்டுகள் ஒட்டுமொத்தமாக சரணடையவுள்ளதாக மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து வரும் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் பணியை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.
அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் நக்சல்கள் இல்லாத தேசமாக நாட்டை உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ள நிலையில், கடந்த ஓராண்டில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நக்சல்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 18ஆம் தேதி ஆந்திரா, சத்தீஸ்கர், தெலங்கானா மாநில எல்லையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்ட நிலையில், அரசின் கோரிக்கையை ஏற்று நக்சல் அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய நபர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்களுக்கு கடந்த 22ஆம் தேதி மாவோயிஸ்ட் சிறப்பு மண்டல குழுவின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மாவோயிஸ்ட் இயக்கச் செயல்பாடுகளையும், ஆயுதப் போராட்டங்களையும் கைவிட்டு சரணடைய விரும்புவதாகவும், மாநில அரசுகள் வழங்கும் மறுவாழ்வு திட்டத்தை ஏற்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
மாவோஸ்ட்டுகள் சரணடைய அடுத்தாண்டு பிப்ரவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மூன்று மாநில அரசுகளும் நிதானத்தை கடைப்பிடித்து, தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், தங்கள் முறையீட்டின் பின்னணியில் எந்த மறைமுக நோக்கமும் இல்லை என்றும்,
தொலைதுாரத்தில் உள்ள போராளிகளுக்கு தகவல் சென்று சேரும் வகையில், தங்களது கோரிக்கையை அடுத்த சில நாட்களுக்கு வானொலியில் ஒலிபரப்ப வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
















