வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை, இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, சில மணி நேரங்களில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் என தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், நாளை அரியலூர், கடலூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் எனவும் கூறியுள்ளது.
மேலும் வரும் 29ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
















