டிட்வா புயல் எதிரொலியாக இலங்கையில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் நிலச்சரிவால் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 21 பேர் மாயமாகியுள்ளதாகவும் அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், அதற்கு முன்னதாக இலங்கையில் கோர தாண்டவமாடி வருகிறது.
இதுவரை கிடைத்த தகவலின்படி, பதுளை மாவட்டத்தில் மட்டும் நிலச்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் வீடுகள் இடிந்து பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தப் புயலானது, கிழக்கு கடற்கரையை நோக்கி நகர்வதால், இலங்கையில் வரும் நாட்களில் 200 மில்லி மீட்டருக்கு மேல் மழை பொழிய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாகத் தாழ்வான பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில், 2003ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையில் ஏற்படும் மிகக் கடுமையான வெள்ள பேரிடராக இது கருதப்படுகிறது.
















