மூன்றாம் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறுபவர்களை நிறுத்தி வைக்கப் போவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் கைதான இளைஞர், ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஹ்மத்துல்லா லக்வாத் என்பதும் ஜோ பைடன் ஆட்சி காலத்தில் அவர் அமெரிக்காவில் குடியேறியதும் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு கடிவாளம் போட்டுள்ள டிரம்பிற்கு இந்த விவகாரம் கூடுதலாகக் கைகொடுத்துள்ளது. அதன்படி, மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வருவோரை முழுமையாக நிறுத்தப் போவதாக அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்நாட்டு பாதுகாப்பினை உறுதி செய்ய இந்த நடவடிக்கை அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
பைடன் ஆட்சி காலத்தில் பல லட்சம் பேர் சட்டவிரோதமாக அனுமதிக்கப்பட்டனர் எனவும் ‘ஸ்லீப்பி ஜோ பைடனின் ஆட்டோபென்’ (Sleepy Joe Biden’s Autopen) திட்டம் மூலம் அவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வேன் எனவும் டிரம்ப் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இதனால் ஆப்கானிஸ்தான், மியான்மர், காங்கோ குடியரசு, கியூபா, எரித்திரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், வெனிசுலா, ஏமன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
















