சென்னைக்கு தெற்கே சுமார் 430 கிலோ மீட்டர் தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘டிட்வா’ புயலாக வலுப்பெற்றது. இது, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், சென்னையின் தென்கிழக்கே 430 கிலோ மீட்டர் தொலைவில் நிலவி வருகிறது.
இதுதொடர்பாக வானிலை மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், டிட்வா” புயல் வடக்கு திசையில் நகர்ந்து, 29-11-2025 – அதிகாலை 0230 மணி அளவில் அதே பகுதிகளில், இலங்கை திரிகோண மலையிலிருந்து வடமேற்கே சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கை மட்டக்கிளப்பிலிருந்து வடமேற்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 220 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 330 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கே 430 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக, 8 முதல் 11 அடி வரை கடல் அலை மேலெழும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடலோர மாவட்ட மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் தற்போது மழை தொடங்கியுள்ளது.
நுங்கம்பாக்கம், வடபழனி, அண்ணா சாலை, அசோக் நகர், கோடம்பாக்கம் உள்ளிட பல்வேறு இடங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
















