காரைக்காலில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுகள் தயாரிக்கும் ஒருங்கிணைந்த உணவு கூடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. புயல் மற்றும் மழை பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், தேசிய பேரிடர் மீட்புப்படை பேரிடர் மேலாண்மைத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு பால் உள்ளிட்ட சத்தான பொருட்களை வழங்க வேண்டும் என்றும், அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து, திருபட்டினச்சேரி மீனவ கிராமத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறு மீனவர்களிடம் அறிவுறுத்தினார்.
இதனை அடுத்து, நேரு நகர் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த உணவு கூடத்தில் உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவை தரமாகவும், சுகாதாரமாகவும் தயார் செய்து உரிய காலத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
















