இந்தியாவின் தனியார் விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனமான SKYROOT-க்கு, சர்வதேச அளவில் மவுசு கூடியிருக்கிறது. விக்ரம் – 1 ராக்கெட் மூலம் சிறிய ரக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த பலத்த போட்டி நிலவுகிறது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
இந்தியாவின் தனியார் விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனமான SKYROOT AEROSPACE, சிறிய ரக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த ஆயத்தமாகி வருகிறது. விக்ரம் – 1 ராக்கெட் மூலம் அசாத்திய சாதனை படைப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், செயற்கைக்கோள்களுக்கான SLOT பெறுவதில் உலக நாடுகள் இடையே போட்டா போட்டி நிலவிகிறது.
SKYROOT நிறுவனத்திற்கு இது முதல் PROJECT என்ற போதும், ராக்கெட் சோதனை முயற்சி வெற்றி பெற்றதால், பலத்த போட்டி இருப்பதாகத் தெரிகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள SKYROOT நிறுவன தலைமை செயல் அதிகாரி பவன்குமார் சந்தானா, ஒட்டுமொத்தமாக 500 கிலோ எடை வரை மட்டுமே, விக்ரம் – 1 ராக்கெட்டால் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும் என்ற சூழலில், அதனை தாண்டிக் கிராக்கி ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, SKYROOT AEROSPACE-ன் ‘Infinity வளாகத்தை’ பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்த பின், தங்கள் நிறுவனம் மீதான நம்பகத்தன்மை அதிகரித்திருப்பதாகப் பவன்குமார் சந்தானா மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
2 லட்சம் சதுரடியில் திறந்து வைக்கப்பட்ட இந்த வளாகம், முற்றிலும் உள்நாட்டு உபகரணங்கள் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். விக்ரம் ரக ராக்கெட்டுகளுக்கான முக்கிய பாகங்கள் இங்கிருந்தே தயாரிக்கப்படுவதாகவும்அவர் விளக்கமளித்துள்ளார். SKYROOT AEROSPACE நிறுவனத்தில் ஒட்டுமொத்தமாக ஆயிரம் பேர் பணிபுரிவதாகவும், புதிதாகத் திறக்கப்பட்ட ‘Infinity வளாகத்தில் மட்டும் 600 ஊழியர்கள் பணியாற்றுவதாகவும் தலைமை செயல் அதிகாரி பவன்குமார் சந்தானா தெரிவித்துள்ளார்.
விக்ரம் 1 ராக்கெட்டைப் பொறுத்தவரையில், அனைத்து என்ஜின் சோதனைகளும் நிறைவு பெற்றுள்ளதாகக் குறிப்படும் பவன்குமார் சந்தானா, ராக்கெட் ஏவுதலுக்கான இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். அடுத்த 3 மாத காலத்திற்குள் தங்களது முதல் விண்வெளி பயணம் தொடங்கும் எனவும் அவர் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பெரிய ரக ராக்கெட்டுகள் மூலம் எதிர்பார்க்கக்கூடிய புவி வட்ட பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்துவது கடினம் என்பதால், வாடிக்கையாளர்கள் தங்கள் நிறுவனத்தைத் தேடி வருவதாகப் பவன்குமார் சந்தானா கூறுகிறார்.
ரயிலில் பயணிப்பதையும், காரில் பயணிப்பதையும் அவர் அதற்கு உதாரணமாகக் குறிப்பிடுகிறார். விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை பாஜக அரசு தொடர்ந்து ஊக்குவித்து வரும் நிலையில், SKYROOT AEROSPACE தனக்கென தனியிடம் பிடித்து SPACE X நிறுவனத்திற்கு இணையாகச் சீறிப்பாய காத்திருக்கிறது என்றே கூற வேண்டும்.
















