உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கோயில் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி தீபத் திருநாளான நேற்று, தீபத் தூணில் மகா தீபம் ஏற்றப்படும் என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் காலை முதலே காத்திருந்தனர். எனினும் நேரம் ஆக ஆக கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகள் செய்யவில்லை.
இந்தநிலையில் மாலை 6 மணிக்கு வழக்கம்போல் இந்த ஆண்டும் உச்சி பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதனிடையே நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் உள்ள தீபத் தூணில், தீபம் ஏற்றப்படாததால், கோயில் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பக்தர்களுக்கும் மற்றும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
















