திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக அரசின் செயல், மக்களின் நம்பிக்கை மையத்தையே தகர்த்துவிட்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சனாதன தர்மத்தின் மீதான விரோதம் காரணமாகவே திமுக அரசு இதுபோன்று தாக்குதல் நடத்தியுள்ளதாகவும்
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத இந்தச் செயல் தமது மக்களின் நம்பிக்கையின் மையத்தையே தாக்குவதாகவும் கூறியுள்ளார்.
இந்துக்களுக்கு சேவை செய்ய வேண்டிய இந்து சமய அறநிலையத் துறை இந்துக்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கான போலீசாரை வைத்து இந்து மதத்தின் புனித செயலை திமுக அரசு தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் திமுக அரசின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளதாகவும், சனாதன தர்மம் மீது திமுகவுக்கு இந்த அளவு வெறுப்பு ஏன் என்பதற்கு திமுக பதில் சொல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
















