சர்வதேச அளவில் இந்திய ராணுவ தளவாடங்களுக்கான மவுசு அதிகரித்துள்ள நிலையில், நமது அண்டை நாடான சீனாவின் ஆயுத ஏற்றுமதி சரிந்துள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) சமீபத்திய அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
சர்வதேச ஆயுத சந்தையில் இந்தியா ஆதிக்கம் செலுத்தவில்லை என்றாலும் கூட, பாரதத்தில் வளர்ந்து வரும் ஆயுதத் தொழிலும், தளவாடங்கள் ஏற்றுமதியும் குறிப்பிடத் தக்க வளர்ச்சியை பெற்றுள்ளன.. Stockholm International Peace Research Institute அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024ம் ஆண்டுக்கான உலகளாவிய ஆயுத ஏற்றுமதி குறிப்பிடத் தக்க மாற்றத்தைக் கண்டுள்ளது.
உலகளவில் ஆயுத வருவாய் 679 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது, இது கடந்த ஆண்டைவிட 5.9 சதவிகிதம் அதிகம் என்பது சாதனையாகவே கருதப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இந்த வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றினாலும், சீன ஆயுத நிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது.
ஆசியா, ஓசியானியா பிராந்தியங்கள் பெரும்பாலும் சரிவைக் கண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் ஆயுதத் தொழில் உலக ஆயுத சந்தையில் இன்னும் ஆதிக்கம் செலுத்தவில்லை என்றாலும், ஆயுத வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது. அதன்படி, இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் ஆகிய நிறுவனங்களின் ஒருங்கிணைந்த வருவாய், 2024ம் ஆண்டில் மட்டும் 8.2 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக Stockholm International Peace Research Institute-இன் அறிக்கையில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டு 6.9 பில்லியன் டாலராக இருந்து ஆயுத வருவாய், 2024ம் ஆண்டு 7.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ரேடார் அமைப்புகள், மின்னணு போர் உபகரணங்களுக்கான உள்நாட்டு ஆர்டர்களை பெறுவதன் மூலம் வருவாய் 24 சதவிகிதம் அதிகரித்துள்ளது. உலகளவில் 44வது இடத்தில் உள்ள HAL நிறுவனம் 3.81 பில்லியன் டாலரை ஈட்டியுள்ளது. விநியோகங்களில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக முந்தைய ஆண்டை காட்டிலும் வருவாய் சிறிதளவு குறைந்துள்ளது. கடற்படை கப்பல் கட்டுமானத்தில் கவனம் செலுத்தும் மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ், நீர்மூழ்கிக் கப்பல், போர்க்கப்பல் உற்பத்தியின் மூலம், 9.8 சதவிகிதம் வருவாய் அதிகரித்துள்ளது.
இந்த வளர்ச்சியானது, பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்ட இந்தியாவின் “ஆத்மநிர்பர் பாரத்” அல்லது சுயசார்பு இந்தியா திட்டங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. இந்தியா ராணுவ தளவாடங்கள் உற்பத்தியைப் பெருக்குவது, வழக்கமான ஆயுத விநியோகஸ்தர்களுக்கான சவால் அளிக்கும் வகையிலான வலுவான தொழில்துறை வளர்ச்சியைக் குறிப்பதாக SIPRI அறிக்கை தெரிவிக்கிறது.
இதற்கு நேர்மாறாக, ஆயுத சந்தையில் சீனாவின் நிலை பலவீனமடைந்துள்ளது.SIPRI அறிக்கையின்படி, டாப் 100 இல் உள்ள சீனாவின் 8 ஆயுத உற்பத்தியாளர்களின் ஒருங்கிணைந்த வருவாய் 10 சதவிகிதம் குறைந்து,88.3 டாலராக உள்ளது. இந்தச் சரிவு, அதன் பாதுகாப்புத் துறையில் ஊழல்கள், தலைமை மாற்றங்களால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.அதன்படி சீனாவின் முன்னணி உற்பத்தியாளரான NORINCO, வருவாயில் 31 சதவிகித வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் ராணுவ செயற்கைக்கோள் திட்டங்களில் தாமதங்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இடையே அதன் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதால் 16 சதவிகித சரிவைக் கண்டுள்ளது.
சீனாவின் சரிவு ஆசியாவின் ஒட்டுமொத்த ஆயுத வருவாயை எதிர்மறையாகப் பாதித்தாலும், பிற பிராந்திய சக்திகள் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டன. தென் கொரியாவின் ஆயுத உற்பத்தி 31 சதவிகிதம் அதிகரித்து 14.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஜப்பானின் ஆயுத சந்தையும் கணிசமான வளர்ச்சியை பெற்றுள்ளது.
முதல் 100 இடங்களில் உள்ள 39 அமெரிக்க நிறுவனங்கள் ஆயுத வருவாயில் 334 பில்லியன் டாலரை ஈட்டியுள்ளன. இது உலகளாவிய விற்பனையில் கிட்டத்தட்ட பாதியைக் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஆயுத நிறுவனங்களின் வருவாய் 13 சதவிகிதம் அதிகரித்து 151 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. உக்ரைனில் நடந்து வரும் மோதலுக்குப் பதிலளிக்கும் விதமாக ராணுவச் செலவு அதிகரித்ததே இதற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, உள்நாட்டு பாதுகாப்பு கொள்முதல் மற்றும் உற்பத்தியில் தொடர்ச்சியான வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. தென் கொரியா மற்றும் இஸ்ரேல் நிறுவனங்களுடன் போட்டியிடுவதில் சவால்களை எதிர்கொண்டாலும், ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சந்தைகளை குறிவைத்து, இந்தியா தனது ஆயுத ஏற்றுமதியை விரிவுபடுத்த வாய்ப்புள்ளதாகப் பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
















