செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால், CEO உள்பட விரைவில் 80 சதவிகிதம் பேர் வேலையை இழக்கக்கூடும் என்று AI குரு ஸ்டூவர்ட் ரஸ்ஸல் எச்சரித்துள்ளார். அதற்கான காரணம் என்ன விரிவாகப் பார்க்கலாம்.
செயற்கை நுண்ணறிவு உலகையே மாற்றி வருகிறது… பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்கனவே ஏ.ஐ. ஒருங்கிணைப்பை மேம்படுத்தி, ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன, செய்து வருகின்றன. ஏ.ஐ. தொழில்நுட்ப வளர்ச்சியால், உண்மையில் ஊழியர்களுக்கு மட்டுமல்ல, தலைமைச் செயல் அதிகாரிகளுக்கும் பணி பாதுகாப்பு இல்லை என்று எச்சரிக்கிறார் ஏ.ஐ., குரு ஸ்டூவர்ட் ரஸ்ஸல்.
ஏ.ஐ. உங்களைவிட சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக முடியும் என்று அவர் கூறியதில் இருந்து மருத்துவத் துறைக்கு ஆபத்து அதிகமாகியுள்ளது. நாம் எதையெல்லாம் வேலை என்று அழைக்கிறோமோ அவை அனைத்தையும் ஏ.ஐ. அமைப்புகள் செய்வதாகக் கூறிய அவர், அறுவை சிகிச்சை நிபுணர்கள் போன்ற மிகவும் சிறப்பு வாய்ந்த, பாதுகாப்பான பதவிகள் கூட, ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் பறிக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிட்டதாக எச்சரிக்கிறார்.
ஒருவர் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக மாற விரும்புகிறார் என்றால், அதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று கூறும் ஸ்டூவர்ட் ரஸ்ஸல், ஆனால், அதனைக் கற்றுக்கொள்ள ரோபோவுக்கு ஏழே வினாடிகள் போதும் என்று கூறியிருக்கிறார்.
இதுவரை பெரும்பாலான பணிநீக்கங்கள், நடுத்தர மற்றும் கீழ்மட்ட ஊழியர்களை பாதித்திருந்தாலும், நீண்டகாலத்திற்கு, நிர்வாகிகள் கூட பாதுகாப்பான பதவிகளில் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்.
அதாவது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முடிவுவெடுக்கும் அதிகாரத்திற்குள் வந்தால், அப்போது CEO-க்களின் கதியும் அதோ கதிதான் என்று குறிப்பிடுகிறார் ஸ்டூவர்ட் ரஸ்ஸல்… உலகளவில் ஒவ்வொரு அரசும் ஒரு பெரிய நெருக்கடியை எதிர்கொள்ளப்போவதாக நம்பும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதாகவும், சர்வதேச சமூகம் தற்போது 80 சதவிகித வேலையின்மையை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.
பணியிடங்களில் உள்ள அனைவருக்கும் AI ஒரு ஆபத்தாக மாறும் என்று நினைப்பது ஸ்டூவர்ட் ரஸ்ஸல் மட்டுமல்ல. கடந்த மாதம், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையின் கருத்தும்கூட.. ஆண்ட்ரூ யாங் மற்றும் ஆந்த்ரோபிக் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி போன்ற சிலர், அமெரிக்காவில் கோடிக்கணக்கான பதவிகள் பறிபோகலாம் அல்லது மாற்றப்படலாம் என்று மதிப்பிட்டாலும், என்விடியாவின் ஜென்சன் ஹுவாங் மற்றும் மெட்டாவின் யான் லீகன் உள்ளிட்டோர், AI வேலையை நீக்குவதற்குப் பதிலாக மாறும் என்று தங்களது வாதத்தை முன்வைக்கின்றனர். எனினும் ரஸ்ஸலின் எச்சரிக்கை விரிவானது, சில தொழில்கள் மட்டுமே மனித ஆற்றலை தாங்கி நிற்கும் என்று கூறுவது நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டியவையே.
















