சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே யூரியா உர தட்டுப்பாடு காரணமாகத் தொடக்க வேளாண்மை சங்கத்தின் முன்பாகக் காத்திருந்த விவசாயிகள் ஊழியர்கள் வந்ததும் முண்டியடித்துக்கொண்டு பெயரை பதிவு செய்தனர்.
மானாமதுரை அருகே உள்ள குவளைவேலி, அரசகுளம், அன்னவாசல் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வரும் நிலையில், இப்பகுதிகளுக்கு முறையாக யூரியா உரங்கள் கிடைப்பதில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைப் பெறுவதற்காக மாவட்ட தொடக்க வேளாண் சங்கத்தின் முன்பாக நீண்ட நேரம் விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
பின்னர் தாமதமாகப் பணிக்கு வந்த அரசு ஊழியர்கள் ஆதார் அட்டைகளை கேட்ட போது தங்களின் பெயரை பதிவு செய்வதற்காக விவசாயிகள் ஒருவரை ஒருவர் முண்டியடித்தபடி சென்றனர்.
இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய சமூக ஆர்வலர்கள் யூரியா உரத் தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தாமதமாகப் பணிக்கு வந்த அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
















