ஆர்எஸ்எஸ் அமைப்பு எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல என, அதன் தலைவர் மோகன் பாகவத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது நிர்வாகிகளை சந்திக்கும் அவர், எதிர்கால செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து உரையாடி வருகிறார். அந்த வகையில் திருச்சி சமயபுரத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மோகன் பாகவத் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, இந்து சமுதாயத்தை முன்னேற்றுவதற்கானது என தெரிவித்தார். ஆனால் வேறு எந்த மதத்திற்கும் ஆர்எஸ்எஸ் எதிரானது அல்ல என்றும் அவர் கூறினார்.
என் உடலை வலுவாக வைத்துக் கொள்கிறேன் என்றால், அது பிறரை தாக்குவதற்காக அல்ல என்றும், யாராவது என்னை தாக்கினால், அந்த வலு என்னை காப்பாற்றும் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்திய திருநாடு மற்றும் மக்களின் நலனுக்காக ஆர்எஸ்எஸ் பெரும் பங்காற்றியுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் ஒரு தனியாக அமைப்பு கிடையாது ஒட்டுமொத்த சமூகத்தையும் ஓரணியில் ஒன்று திரட்ட வேண்டும் என்று நோக்கத்தில் தான் சங்கம் செயல்பட்டு வருகிறது என்றும், அவர் கூறினார்.
நாம் அனைவரும் சங்கத்தின் முக்கியத்துவத்தை அனைவரிடமும் எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். குறிப்பாக சங்கத்தில் உள்ள முக்கிய நபர்கள் இந்தியா முழுவதும் சென்று தகுதியான நபர்களை கண்டறிந்து அவர்களிடம் சங்கத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமான தகவல்களையும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்க வேண்டும் என்றும் மோகன் பகவத் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் சங்கத்திற்கு இந்த அளவுக்கு ஒரு அங்கீகாரம் இல்லை என்றும், மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். தவறான புரிதல் காரணமாக சில வததிகள் பரப்பப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
















