தொழில்நுட்ப துறையில் பாஜக அரசு மேற்கொண்டு வரும் மாபெரும் புரட்சியால், மைக்ரோசாஃப்ட், கூகுள், காக்னிசன்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளை குவித்து வருகின்றன. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
உலகின் ஒவ்வொரு நகர்வும் தொழில்நுட்ப சார்ந்ததாக மாறியிருக்கும் நிலையில், அதற்கேற்ப இந்தியாவும் தொழில்நுட்ப பயன்பாட்டில் அசுர வேகத்தில் பயணிக்கிறது. இதன் காரணமாக அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளுக்கு ஈடாக DIGITAL WORLD-ல் கால்தடம் பதித்து இந்தியா தனக்கெனத் தனி இடம் பிடித்திருக்கிறது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டே இந்தியாவில் முதலீடுகளை குவிக்க உலகின் முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. உலகளவில் ஏஐ பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட மெகா நிறுவனங்கள், வளர்ந்த நாடுகளை காட்டிலும் இந்தியாவில் முதலீடு செய்வதையே பெரிதும் விரும்புகின்றன.
பிரதமர் மோடியுடன் இந்நிறுவனங்களின் உயரதிகாரிகள் சந்திப்பு நடத்திய பிறகு இந்த ஆர்வம் பெரிதளவில் காணப்படுகிறது. அதுவும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கும், கூகுள் நிறுவனத்துக்கும் இடையே யார் அதிக முதலீடு செய்வது என்ற போட்டி நிலவுகிறது என்றே கூறலாம். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், ஏஐ தரவு மையம் அமைக்கக் கூகுள் நிறுவனம் 15 பில்லியன் டாலர் ஒதுக்கிய நிலையில், அதற்குப் போட்டியாக 17 புள்ளி 5 பில்லியன் டாலர் மதிப்பில் ஏஐ சார்ந்த முதலீடுகளை மேற்கொள்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆசிய அளவில் ஏஐ துறை சார்ந்த முதலீட்டில் இதுவே அதிகம் எனக் கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவில் மட்டுமல்ல, செமிகண்டெக்டர் உற்பத்தியிலும் முன்னணி நிறுவனங்களின் முதல் சாய்ஸாக இந்தியாவே இருக்கிறது. இன்டல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லிப் பூ தன், பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடத்திய நிலையில், டாடா நிறுவனத்துடன் இணைந்து இன்டல் நிறுவனம் செமிகண்டெக்டர் உற்பத்தியில் ஈடுபட முடிவெடுத்திருக்கிறது.
இதற்கான ஒப்பந்தமும் இரு நிறுவனங்களுக்கு இடையே கையெழுத்தாகி இருப்பதாகத் தெரிகிறது. இந்தியாவில் திறன் வாய்ந்த பணியாளர்கள் அதிகம் இருப்பதாகவும், இதன் காரணமாகே உலகின் முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் போட்டி போட்டு முதலீடுகளை குவிப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்வதேச அளவில் உள்ள சிப் டிசைன் என்ஜினியர்களில் 20 சதவீதம் பேர் இந்தியாவில் இருப்பதாகவும் அவர்கள் உதாரணம் தெரிவிக்கிறார்கள். இது மட்டுமல்ல, பாஜக அரசு தொழில்நுட்ப துறை சார்ந்து வகுக்கும் கொள்கைகளும் இதில் முக்கிய பங்காற்றுவதாகத் தெரிவிக்கின்றனர்.
மற்ற நாடுகளை காட்டிலும் பாதுகாப்பாகவும், எளிமையாகவும் கொள்கை வகுக்கப்படுவதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உற்பத்திக்கு ஏற்றால் போல், விற்பனைக்கான சூழலும் சாதகமாக இருப்பதால், இனி இந்தியாவின் வளர்ச்சி வேகத்திடம், ராக்கெட்டே தோற்று போகும் என அடித்துக் கூறுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
















