பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, அந்நாட்டின் அரசியல் நேர்மை குறித்து பரவலான விவாதத்தை எழுப்பியுள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, தேசிய சபாநாயகரான அயாஸ் சாதிக், கீழே கிடந்த சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான பணத்தை எடுத்து, இது யாருடைய பணம்? என்று கேள்வி கேட்டார்.
உண்மையில் யாரோ ஒருவருக்குச் சொந்தமாக இருக்கும். அதை அவர்களிடமே ஒப்படைத்து விடலாம் என்று நினைத்துத்தான் அவர் கூட்டத்தொடரின் மத்தியில் இந்தக் கேள்வியை எழுப்பினார். ஆனால் அவையில் நடந்தது அப்படியாக இல்லை.
அந்த ஐம்பதாயிரம் ரூபாய் தன்னுடையது தான் என 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிமை கோரினர். இதனால் குழப்பமடைந்த சபாநாயகர், இருப்பதோ பத்து தாள்கள், உரிமை கோருவது 12 பேர் என நகைச்சுவையாகக் கூறினார்.
அதாவது, ஆளுக்கு ஒரு தாளை தொலைத்திருப்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அதில் இரண்டு பேர் எஞ்சியிருப்பார்கள் என்பது போலக் கிண்டலத்தார்.
இது அந்த அவை முழுவதும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இந்த நகைச்சுவையான சம்பவம் குறித்த காணொளி, சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி, பாகிஸ்தானியர்கள் மத்தியில் கடும் கோபத்தையும், அவமானத்தையும் தூண்டியுள்ளது.
பாகிஸ்தான் அரசியலில் நிலவும் ஊழல் குறித்தும், அடிப்படை நேர்மையின்மை குறித்தும் பாகிஸ்தான் மக்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
















