H-1B, H-4 விசாவுக்காக விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின் சமூக ஊடக கணக்குகளையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்திருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. விசா பெறுவதற்காக டிசம்பர் மாதத்தில் நடைபெறவிருந்த நேர்காணல்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஐடி ஊழியர்களின் கனவு கேள்விக்குறியாகி உள்ளது.. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
அமெரிக்க அரசு விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் பின்பற்றி வரும் நிலையில், டிரம்ப் அரசு தற்போது பிறப்பித்த உத்தரவு அமெரிக்காவுக்கு செல்ல வேண்டும் எனக் கனவு காணும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களின் கனவை பாழாக்கியுள்ளது. H-1B, H-4 விசாவுக்காக விண்ணப்பம் செய்யும் அனைத்து விண்ணப்பதாரரின் சமூக ஊடக கணக்குகளையும் சோதனை செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்த நிலையில், இந்தியர்கள் உட்பட பல்வேறு வெளிநாட்டினர் மத்தியிலும் அது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் திடீர் உத்தரவால், புதிய விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் அமெரிக்க தூதரகங்கள் தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியாவில் செயல்பட்டு வரும் அமெரிக்க தூதரகங்கள் இந்நடவடிக்கையில் மும்முரமாக இறங்கியுள்ளன. டிரம்ப் அரசின் புதிய உத்தரவு, டிசம்பர் 15-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிலையில், H-1B, H-4 விசா விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல்களை அமெரிக்க தூதரகங்கள் ஒத்தி வைக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கான நேர்காணல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அமெரிக்க தூதரகங்கள் அனுப்பியுள்ள மின்னஞ்சலில், புதிய விதிமுறை காரணமாக ஒரு நாளில் செய்யப்படும் நேர்காணல் எண்ணிக்கை குறையும் என்பதால், டிசம்பர் இரண்டாம் பாதியில் நடைபெறவிருந்த நேர்காணல்கள் ரத்து செய்யப்பட்டு மார்ச் 2026க்கு ஒத்தி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் இந்தப் புதிய விதிமுறை குறித்து அமெரிக்க குடியேற்ற வழக்கறிஞர் ஜேம்ஸ் ஹாலிஸும், AI ஆலோசகர் அன்புமன் ஜாவும் கூறுகையில், இந்தியர்களுக்கு இந்தப் புதிய விதி கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.
அனைத்து சமூக ஊடக கணக்குகளையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டி இருப்பதால், தனிநபர் பாதுகாப்பிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர். ஆட்சி பொறுப்பேற்றது முதல் குடியுரிமை விவகாரங்களில் அதிக கட்டுப்பாடுகளை விதித்து வந்த ட்ரம்ப், அண்மை காலமாக மனமாற்றம் அடைந்திருந்தார்.
அமெரிக்காவின் வளர்ச்சிக்கு H-1B வழங்கப்படுவது அவசியம் என்றெல்லாம் கூறிவந்தார். ஆனார், வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக, ட்ரம்ப் மீண்டும் அடம்பிடிக்க தொடங்கி இருப்பதால், H-1B விசாவுக்கு விண்ணப்பிக்கலாமா ? வேண்டாமா ? எனக் குழம்பி போயிருக்கின்றனர் விண்ணப்பதாரர்கள்.
















