டிட்வா உள்ளிட்ட புயல்கள் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியதற்கு என்ன காரணம் என்பதற்கு விஞ்ஞானிகள் தற்போது புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளனர். அதுகுறித்தத செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
அண்மையில் தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்ட சென்யார் மற்றும் டிட்வா புயல்கள் பலத்த சேதத்தை ஏற்படுத்தின. இந்தோனேஷியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சுமார் 250 பேர் மாயமாகினர்.
இலங்கையில் 600க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மலேசியாவில் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்த நிலையில், தாய்லாந்தில் 181 பேர் உயிரிழக்க நேரிட்டது. மேலும், இந்த அனைத்து நாடுகளிலும் பல பில்லியன் டாலர் பொருட்சேதமும் ஏற்பட்டது. இந்த 2 புயல்களும் இத்தனை தீவிரமடைந்தது ஏன் என்பதற்கு ஆய்வாளர்கள் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர்.
அதில் முதன்மையானது, காலநிலை மாற்றம். குறிப்பாக, வங்கக்கடலின் மேற்பரப்பில் வெப்பநிலை அதிகரித்ததால்தான், இரு புயல்களும் ஆக்ரோஷமாக மாறியதாகவும், காடுகள் அழிப்பு போன்ற பிற காரணங்கள், இந்த புயல்களை மேலும் மோசமாக்கியதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியப் பெருங்கடலில் வடக்கு பகுதியின் மேற்பரப்பு வெப்பநிலை அண்மை காலமாக அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 1991ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான சராசரி வெப்பநிலையை காட்டிலும் 0.2 சதவீதம் வெப்பநிலை அதிகரித்திருப்பதையும் அவர்கள் சுட்டி காட்டுகின்றனர்.
கடலின் மேற்பரப்பில் ஏற்பட்ட இந்த மாற்றம், அங்கு உருவான புயலுக்கு அதிக ஆற்றலையும், வெப்பத்தையும் வழங்கியதாக விளக்கம் அளிக்கப்படுகிறது. கடற்பகுதிகளில் 0.2 சதவீதம் வெப்பநிலை உயர்ந்துள்ளதென்றால், நிலப்பகுதியில் 1.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளது. இந்த மாற்றம் மட்டும் நிகழாமல் இருந்திருந்தால், கடலின் மேற்பகுதியில் கடந்த மாதம் ஒரு டிகிரி வெப்பம் குறைந்திருக்கும் எனவும், புயல்கள் இத்தனை தீவிரத்தை அடைந்திருக்காது எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மழைக்காலங்களில் புயல்கள் ஏற்படுவது வழக்கம்தான் என்றாலும், தற்போது காலநிலை மாற்றமானது புயல்களின் வீரியத்தை அதிகரிக்க தொடங்கியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த ராயல் நெதர்லாந்து வானிலை நிறுவத்தின் ஆய்வாளரான சாரா க்யூ, புயல்களின் போக்கில் தென்படும் இத்தகைய தீவிரமும், அவற்றால் ஏற்படும் கடுமையான பாதிப்புகளும் இயல்பானதல்லஎனக் குறிப்பிட்டுள்ளார்.
காலநிலை மாற்றத்தால், மலாக்கா ஜலசந்தியில் 50 சதவீதம் வரையும், இலங்கையில் 160 சதவீதம் வரையும் மழைப்பொழிவு அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், சென்யார், டிட்வா போன்று பிற நாடுகளிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
















