ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோனை டெல்லியில் இந்திய ராணுவம் முதல் முறையாக காட்சிக்கு வைத்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இரு தரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தைக்குப் பின் மோதல் முடிவுக்கு வந்தது. இந்த மோதலின்போது பாகிஸ்தான் ராணுவம் ஏவிய அனைத்து டிரோன்களையும் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது.
அவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் ‘YIHA’ என்ற ட்ரோன் ஒன்றை முதல் முறையாக இந்திய ராணுவம் காட்சிக்கு வைத்துள்ளது. டெல்லியில் உள்ள ராணுவ தளபதியின் இல்லத்தில் இந்த ட்ரோன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் தயாரிக்கப்பட்ட இந்த ட்ரோனை, சுமார் 10 கிலோ வெடி பொருட்களுடன் பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்தில் இருந்து பஞ்சாப்பில் இருக்கும் ஜலந்தர் பகுதியை நோக்கி கடந்த மே 10ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவம் ஏவியது.
இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு இந்த ட்ரோனை அமிர்தசரஸ் அருகே சுட்டு வீழ்த்தியது. கீழே விழுந்த டிரோனை இந்திய ராணுவ அதிகாரிகள் கைப்பற்றி, அதன் பாகங்களை ஒருங்கிணைத்து தற்போது காட்சிக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
















