திருவாரூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், மேலராதா நல்லூர் குதம்பநயினார் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம்-ராஜகுமாரி தம்பதிக்கு 6 வயதில் வாய் பேச முடியாத மகன் உள்ள நிலையில், ராஜகுமாரி 2வது முறையாகக் கர்ப்பம் தரித்துள்ளார்.
4 மாத கர்ப்பிணியான ராஜகுமாரிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் திருவாரூர் வடக்கு வீதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காண்பித்துள்ளனர்.
அப்போது, ராஜகுமாரியின் கருக்குழாயில், கரு உருவாகியுள்ளதாகவும், அதற்கு அறுவை சிகிச்சை செய்ய 80 ஆயிரம் ரூபாய் செலவாகும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, கடந்த 8ஆம் தேதி ராஜகுமாரிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், உரிய வசதிகள் இல்லை எனக்கூறி திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு ராஜகுமாரியை அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், ராஜகுமாரி உயிரிழந்து விட்டதாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து, தனியார் அரசு மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜீவானந்தம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அப்போது, ஜீவானந்திடம் தனியாக விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, சந்தேக மரணமஎன வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
















