விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு 1971-ம் ஆண்டில் நடைபெற்ற போரின்போது எடுக்கப்பட்ட அரிய காட்சிகளை இந்திய விமான படை வெளியிட்டுள்ளது.
1971 ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த போரில் இந்திய ராணுவம் வெற்றிப் பெற்றது. அதன் விளைவாக வங்கதேசம் என்ற நாடு உருவானது.
வெறும் 13 நாட்கள் மட்டுமே நடைபெற்ற இந்தப் போரில் அப்போதைய பாகிஸ்தான் படைகளின் தலைவரான ஜெனரல் ஏ.கே.நியாசி உள்ளிட்ட 93 ஆயிரம் வீரர்கள் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தனர்.
இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16 ஆம் தேதி விஜய் திவாஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்திய ராணுவத்தின் துணிச்சல், தியாகம் மற்றும் உறுதியான மனப்பாங்கைக் கௌரவிக்கும் வகையில், போரின்போது எடுக்கப்பட்ட அரிய காட்சிகளை இந்திய விமானப்படை வெளியிட்டிருக்கிறது.
















