முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், நீதிமன்ற விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராகத்தான் வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டதாக கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி , அவரின் சகோதரர் அசோக் உள்ளிட்ட 10 பேர் நேரில் ஆஜராகியிருந்தனர்.
அப்போது உச்சநீதிமன்றம் தனக்கு ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி இருப்பதாக செந்தில் பாலாஜி தரப்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதை படித்து பார்த்த நீதிபதி, ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், நீதிமன்ற விசாரணைக்கு அது பொருந்தாது என்று கூறினார்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகத்தான் வேண்டும் என தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கில் முதல் 5 பேரிடம் சாட்சி விசாரணை நிறைவு பெற்றதாக குறிப்பிட்ட நீதிபதி, மீதமுள்ளவர்களிடம் சாட்சி விசாரணை நடத்துவதற்காக ஜனவரி 9 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
















