வங்கதேச போரில் இந்தியாவிடம் பாகிஸ்தானின் தோல்வி போர்க்களத்தில் ஏற்பட்ட தோல்வி மட்டுமல்ல. மது, மாது மற்றும் ஊழலால் சீரழிந்த ஒரு மோசமான ஆட்சியின் இறுதிச் செயல் என்று பாகிஸ்தானின் விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1971ஆம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி, இந்திய-பாகிஸ்தான் போர் தொடங்கியது. பாகிஸ்தானின் ஜெனரல் யஹ்யா கானின் அடக்குமுறை ராணுவ ஆட்சியில் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதன் காரணமாக இந்தப் போர் நடந்தது. ஆப்ரேஷன் ட்ரைடென்ட் என்ற பெயரில் இந்தியா ராணுவ நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியது.
13 நாட்கள் நீடித்த இந்தப் போர் அதிகாரப்பூர்வமாக, டிசம்பர் 16ம் தேதி முடிவடைந்தது. இந்தியக் கொடிகள் வானில் பறந்தன, பாகிஸ்தானின் அகந்தை மணலில் புதைக்கப்பட்டது. புதிய தேசமாக வங்கதேசம் உருவாக்கப்பட்டது. எப்போதும் இல்லாத மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தியா உலக அளவில் மாபெரும் சக்தியாக உயர்ந்தது.
பதின்மூன்று நாட்கள் போரின் விளைவாகச் சுமார் 93,000 வீரர்களுடன் பாகிஸ்தான் ராணுவம் முழுமையாக இந்தியாவிடம் சரணடைந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய இராணுவச் சரணடைதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத் தக்கது. பாகிஸ்தானின் கிழக்குக் கட்டளையின் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஏ.ஏ.கே. ‘டைகர்’ நியாசி நடுங்கும் கைகளுடன் பாகிஸ்தானின் பாதியைப் பறிகொடுத்து கையெழுத்திட்டுக் கொண்டிருந்த நேரத்தில், ராவல்பிண்டியில் பாகிஸ்தானின் ராணுவ சர்வாதிகாரி மற்றும் தலைமைத் தளபதியுமான ஜெனரல் யாஹ்யா கான், மது போதையில் ஜெனரல் ராணியுடன் களியாட்டம் ஆடிக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.
இந்தப் பேரதிர்ச்சியிலிருந்து மீளாத பாகிஸ்தானின் புதிய தலைவர் சுல்பிகர் அலி பூட்டோ, தலைமை நீதிபதி ஹமூதுர் ரஹ்மான் தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தார். ஹமூதுர் ரஹ்மான் ஆணையம் 1974-ல் தனது இறுதி அறிக்கையைப் பாகிஸ்தான் அரசிடம் சமர்ப்பித்தது. அதில் பாகிஸ்தான் இராணுவத் தளபதிகள் மற்றும் வீரர்கள் தேசத்தைப் பாதுகாப்பதைப் பற்றிக் கவலைப்படாமல், வீரர்களாகவே இல்லாத நிலையில் மது, மாது எனக் காம இச்சைகளில் மூழ்கிக் கிடந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.
அழகான, தந்திரமான மற்றும் முற்றிலும் இரக்கமற்றவரான ஜெனரல் ராணி” அதாவது தளபதியின் ராணி என்று அறியப்பட்ட அக்லீம், யாஹ்யா கானின் நெருங்கிய தோழியாகவும் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தவர்.பாகிஸ்தானின் அனைத்து சாலைகளும் எந்த அதிகாரப்பூர்வ பதவியையும் வகிக்காத ஜெனரல் ராணிக்கு இட்டுச் சென்றன.
ஹமூதுர் ரஹ்மான் ஆணைய அறிக்கையில் ஜெனரல் ராணியின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், ஒழுக்கக்கேடான பாலியல் உறவுகள் இராணுவக் கட்டளைச் சங்கிலியை எவ்வாறு சிதைத்தன என்பதற்கான உருவகமாகவே இன்றளவும் பாகிஸ்தான் வரலாற்றில் ஜெனரல் ராணி பேசப்படுகிறார். அதிகார ஊழலுக்கு ஜெனரல் ராணி என்றால், அற்பத்தனமான போதை களியாட்டங்களுக்கு மெலடி ராணி பிரபல பாடகி நூர் ஜெஹான் என்று கூறப்படுகிறது.
பிரிவினையின்போது பாகிஸ்தானுக்குச் சென்ற நூர் ஜெஹான், போரின் முக்கியமான மாதங்களில் யாகியா கானின் லாகூர் இல்லத்தில் தனது இரவுகளை மது விருந்துடன் கொண்டாடினார் என்றும், நாடு எரிந்தபோது மெலடி ராணியும், யாகியா கானும் குடித்துவிட்டு சிரித்து கொண்டிருந்தனர் என்றும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் போரில் தோற்பதற்கு முதல் காரணம் ஜெனரல் ராணி என்றால், இரண்டாவது காரணம் மெலடி ராணி, மூன்றாவது காரணம் லாகூரில் பாலியல் விடுதி நடத்தி வந்த சயீதா புகாரி. இவர் லெப்டினன்ட் ஜெனரல் நியாசிக்கு நெருக்கமானவராக இருந்தவர். இப்படி உயர்மட்டத்தில் உள்ள ஒழுக்கச் சீரழிவு அனைத்து ராணுவத் துருப்புகளிலும் வீரர்களின் ஒழுக்கத்தை அழித்துவிட்டது என்று விசாரணை ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், ராணுவத் தளபதிகள் போர்த் திறனைப் படிப்பதை விட மது மயக்கத்தில் பெண்களுடன் காம களியாட்டங்களில் நேரத்தைச் செலவிட்டதால் நாட்டுக்காகப் போராடும் விருப்பத்தையும் உறுதியையும் இழந்தனர் என்று ஆணையத்தின் அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.
போரில் சரணடைந்த பிறகு, போர்க் கைதியாக இந்தியாவுக்கு அழைத்து வரப் பட்ட லெப்டினன்ட் ஜெனரல் நியாசி, நாடு திரும்பிய பிறகு கட்டாயமாக ராணுவத்திலிருந்து நீக்கப்பட்டார். பாகிஸ்தானில் அவமானம் மற்றும் தோல்வியின் பொது அடையாளமாகவே இன்று பார்க்கப்படுகிறார். அதிபர் பதவியையும் ராணுவத் தலைமை பதவியையும் ராஜினாமா செய்த யாஹ்யா கான், சுல்பிகர் அலி பூட்டோவிடம் அதிகாரத்தை ஒப்படைத்த நிலையில், கடைசி வரை வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
பக்கவாதத்தால் 1980-ல் இறந்தார். விசாரணை ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்ட ராணுவத் தளபதிகள் ஒருபோதும் விசாரிக்கப்படவில்லை. அவர்களுக்கு எந்தத் தண்டனையும் வழங்கப்படவில்லை. முழு அறிக்கையும் பல ஆண்டுகளாகவே கிடப்பில் போடப்பட்டது. யாஹ்யா கான் போதையில் இருந்தபோது பாகிஸ்தான் சரிந்தது உண்மை என்ற நிலையில் அந்த மயக்கத்திலேயே இன்னமும் பாகிஸ்தான் இருப்பது தான் துரதிஷ்டவசமானது.
















