ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது இந்திய விமானப்படையினர் தொலை தூரத்தில் இருந்து, பாகிஸ்தானின் கண்காணிப்பு விமானத்தை சுட்டு வீழ்த்தியது மிகப்பெரிய சாதனை என ரஷ்ய ஆய்வாளர்கள் வர்ணித்துள்ளனர். உலகின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த செய்தி குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்…
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல், 25 சுற்றுலா பயணிகள் உட்பட மொத்தமாக 26 பேரின் உயிர்களை பலி வாங்கியது. பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பும், The Resistance Front என்ற அதன் கிளை அமைப்பும் இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றன.
தொடர்ந்து பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்வினையாற்ற “ஆப்ரேஷன் சிந்தூர்” நடவடிக்கையை இந்தியா முன்னெடுத்தது. அதன்படி, கடந்த மே 7-ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து, இந்தியாவின் பாதுகாப்பு படைகள் சரமாரி தாக்குதல்களை நடத்தின. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இந்தியாவின் இந்த அதிரடியை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அரசு மன்றாடியதை தொடர்ந்து, கடந்த மே 10-ம் தேதி ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்தது. இதற்கிடையே ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது இந்திய விமான படையினர் பாகிஸ்தான் ஏவுகணையை, 314 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து S-400 வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி சுட்டு வீழ்த்தியதாகவும், அப்போது அந்நாட்டின் AWACS கண்காணிப்பு விமானமும் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் தகவல் வெளியானது.
இந்திய விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங்கும் இதனை அதிகாரப்பூர்வமாக விளக்கி உறுதிபடுத்தியிருந்தார். குறிப்பாகப் பஞ்சாபில் நிலைநிறுத்தப்பட்டிருந்த விமானப்படையின் S-400 அலகு, 40 டிகிரி வடக்கு 6 டிகிரி கிழக்கு (40N6E) திசையில் ஏவுகணையை ஏவி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள டிங்கா பகுதியில் பறந்துகொண்டிருந்த AWACS கண்காணிப்பு விமானத்தைத் தாக்கியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இதனை உண்மை என ஒப்புக்கொண்டுள்ள ரஷ்ய பாதுகாப்பு நிபுணர் அலெக்ஸே மிக்காய்லோவ் பெட்ரென்கோ, இந்தத் தாக்குதல் S-400 வான் பாதுகாப்பு அமைப்பின் நிரூபிக்கப்பட்ட திறன்களுக்கு முற்றிலும் ஒத்ததாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் போரின்போதும் இதுபோன்ற தொலைதூர தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், 2022-ல் ரஷ்யா S-300V4 அமைப்பை பயன்படுத்தி 217 கிலோ மீட்டர் தொலைவிலிருந்த உக்ரைன் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதை நினைவூட்டினார்.
இந்நிலையில், இந்திய விமானப்படை 314 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பாகிஸ்தானின் கண்காணிப்பு விமானத்தைத் தாக்கியது, உலகிலேயே மிக நீண்ட தூர வான்பரப்பு ஏவுகணை தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்திய விமானப் படையின் இந்தத் தாக்குதல் பாகிஸ்தானின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தி, இந்திய போர் விமானங்களுக்கு முக்கிய மூலோபாய முன்னேற்றத்தை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதே காலகட்டத்தில் AWACS கண்காணிப்பு விமானத்தைப் பாதுகாக்க நியமிக்கப்பட்ட பாகிஸ்தானின் JF-17 போர் விமானங்களும் இலக்காகின. இதனை உண்மையென நிரூபிக்கும் வகையில் சியால்கோட் அருகே 200 கிலோ மீட்டர் தொலைவில், ஒரு JF-17 விமானம் அழிக்கப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்களிலும் செய்தி வெளியாகின.
4 நாட்கள் நீடித்த இந்த ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் S-400 அமைப்பை பயன்படுத்தி மொத்தம் 6 பாகிஸ்தான் விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும், பிரம்மோஸ் ஏவுகணை தாக்குதலில் போலாரி விமான தளத்தில் இருந்த மற்றொரு AWACS கண்காணிப்பு விமானமும் சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் இந்த நடவடிக்கையால் பாகிஸ்தானுக்கு 500 மில்லியன் டாலருக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டதாகவும், அந்நாட்டின் வான்வழி முன்னறிவிப்பு திறன் சுமார் 22 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும் பாதுகாப்பு நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
இந்திய விமானப்படையின் துல்லியமும், மூலோபாய திட்டங்களும் பாராட்டத்தக்கது எனப் புகழ்ந்துள்ள ரஷ்ய பாதுகாப்பு நிபுணர் பெட்ரென்கோ, ‘Shoot and Scoot’ யுத்த நுட்பங்கள், குறைந்த ரேடார் அடையாளங்களை திறம்பட பயன்படுத்தி, இந்திய விமானப்படை எதிரியின் எதிர்-ரேடார் ஏவுகணைகளை தவிர்த்துத் தாக்கியதையும் விளக்கியுள்ளார். மேலும், ஆயுதங்களை தயாரிக்கும் தங்களைவிட இந்திய விமனாப்படையினர், அவற்றை திறமையாகப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் இந்திய விமானப்படையின் துல்லியமும், மூலோபாய வலிமையும் சர்வதேச அளவில் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
















