கடந்த 19 நாட்களாகப் பரபரப்பாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்தது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்கியது. கடந்த 19 நாட்களாக வந்தே பாரதம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள்குறித்து இரு அவைகளும் விவாதித்தன.
மேலும், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக ‘விபி ஜி ராம் ஜி’ மசோதா, அணுசக்தி துறையில், 100 சதவீத தனியார் முதலீட்டை அனுமதிக்கும் ‘சாந்தி’ மசோதா, முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பங்குச்சந்தை விதிகள் மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், இன்று இரு அவைகளும் கூடிய நிலையில், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கூட்டத்தொடர் நிறைவடைந்த பிறகு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேநீர் விருந்து அளித்தார். சபாநாயகர் அறையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எதிர்க்கட்சி சார்பில் காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே, திமுக சார்பில் ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அமளியும் கூச்சலும் நிறைந்த அவைக் கூட்டங்களுக்குப் பிறகு, இருதரப்பு தலைவர்களும் சிரித்த முகத்துடன் கலந்துரையாடியது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக, நீண்ட காலத்திற்குப் பிறகு பிரதமர் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து உரையாடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
















