உலக ஒழுங்கு குறிப்பிடத் தக்க மாற்றங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், இந்தியாவுக்கும் எத்தியோப்பாவுக்கும் இடையிலான ஆழமான உறவுகள், சர்வதேச ஒழுங்கை மறுவரை செய்துள்ளன. பிரதமர் மோடியின் எத்தியோப்பிய பயணம், தெற்கின் வலிமையை உலகிற்கு பறைசாற்றியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
வாஸ்கோட காமாவின் கடல் பயணங்கள் 1490-களில் தொடங்கிய பின் 15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மற்றும் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்தியாவுடன் ஐரோப்பியர்கள் வர்த்தகம் செய்தனர். ஆனால், அந்தக் காலகட்டத்திற்கு முன்பே இந்தியாவும் எத்தியோப்பியாவும் வர்த்தக உறவைக் கொண்டிருந்தன. சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியர்களுடன் வர்த்தகம் செய்யச் செங்கடலில் உள்ள அதுலிஸ் துறைமுகம் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் இருந்து மசாலா பொருட்கள் மற்றும் பட்டு ஆடைகளை இறக்குமதி செய்த எத்தியோப்பிய மக்கள் பதிலுக்குத் தங்கம், தந்தம் போன்ற பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளனர். கடந்த 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், குஜராத்தை சேர்ந்த இந்தியர்களே முதன்முதலில் எத்தியோப்பியாவில் குடியேறத் தொடங்கினர்.
இப்போது எத்தியோப்பியாவில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர். எத்தியோப்பியாவில் பெரும்பாலான ஆசிரியர்கள் இந்தியர்களாகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கும் இடையே அதிகாரப்பூர்வ இராஜதந்திர உறவுகள்1948 ஆம் ஆண்டிலேயே தொடங்கின. 1950-ல் இந்தியாவுக்கான முதல் எத்தியோப்பியா தூதராக அடோ அமானுவேல் ஆபிரகாம் நியமிக்கப் பட்டார். இதன் மூலம் டெல்லியில் தூதரகத்தைத் திறந்த முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையை எத்தியோப்பியா பெற்றது.
பேரரசர் ஹெய்லி செலாசியின் காலத்திலும் அதற்குப் பிறகு ஜனநாயக ஆட்சிக் காலத்திலும் இந்தியாவுடன் நல்லுறவையே எத்தியோப்பியா கொண்டுள்ளது. பனிப்போருக்குப் பிந்தைய காலத்திலும் விமான சேவைகள் வர்த்தகம், மைக்ரோ அணைகள் மற்றும் சிறிய அளவிலான நீர்ப்பாசன ஒத்துழைப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், வெளியுறவு நெறிமுறை, இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு மற்றும் கூட்டு வர்த்தகக் குழு ஒப்பந்தம் என இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
இந்நிலையில், கடந்த வாரம் எத்தியோப்பியாவுக்கு அரசு முறை பயணமாகச் சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அந்நாட்டின் உயரிய விருதான ‘கிரேட் ஆனர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா’ விருதும் வழங்கப்பட்டது. பிரதமர் மோடியும் எத்தியோப்பியப் பிரதமர் டாக்டர் அபி அகமது அலியும் அரசியல், பொருளாதாரம் வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எட்டு ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
ஜி20 பொதுக் கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ஒரு கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம், சுங்கத்துறை விஷயங்களில் ஒத்துழைப்பு, செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி, எத்தியோப்பிய மாணவர்களுக்கான இந்திய கலாசார உறவுகள் கவுன்சில் உதவித்தொகையை உயர்த்துவது, ஐநா சபையின் அமைதி நடவடிக்கைகளுக்கான பயிற்சி மற்றும் நிர்வாக ஒத்துழைப்பு குறித்தும் முடிவெடுக்கப்பட்டு உள்ளன.
கூடுதலாக, தலைநகர் அடிஸ் அபாபாவில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் தாய் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சுகாதார சேவைகளை மேம்படுத்தவும் உதவுவதாக இந்தியா உறுதியளித்துள்ளது. எத்தியோப்பியாவில் உள்ள மிக முக்கியமான வெளிநாட்டு முதலீட்டாளர்களில் இந்திய நிறுவனங்களே தொடர்ந்து முன்னணியில் உள்ளன. அந்நாட்டில் 675-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட இந்திய நிறுவனங்கள் உள்ளன. பிரதமர் மோடியின் வருகையால் மேலும் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய முதலீடுகள் வந்துள்ளன என்று கூறப் படுகிறது.
கடந்த நிதியாண்டில், இருதரப்பு வர்த்தகம் 550.19 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.இதில் இந்திய ஏற்றுமதி 476.81 மில்லியன் அமெரிக்க டாலராகவும், எத்தியோப்பியாவிலிருந்து இறக்குமதி 73.38 மில்லியன் அமெரிக்க டாலராகவும் இருந்தது. இந்தியா-எத்தியோப்பியா உறவுகள் ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் தொலைநோக்குடைய பாதையில் முன்னேறியுள்ளது. இது இந்தியாவின் ஆப்பிரிக்கா உத்தி என்றும், உலகளாவிய தெற்கின் இந்தியாவின் குரல் என்றும் அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
















