உக்ரைன் சமாதான பேச்சுவார்த்தை, வெனிசுலாவுக்கு எதிரான கடற்படை நடவடிக்கை, விரைவில் நடைபெறவுள்ள நடுவண் தேர்தல்கள் மற்றும் FIFA உலக கோப்பை என எல்லாம் சேர்ந்து, வரும் 2026-ஐ அமெரிக்காவின் டிரம்ப் அரசாங்கத்திற்கு சோதனைகள் நிறைந்த ஆண்டாக மாற்றியுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.
குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவின் அதிபராக 2-வது முறை பதிவியேற்று நிர்வாக பொறுப்புகளை கவனித்து வருகிறார். அவரது பதவிக் காலத்தின் முதல் ஆண்டு, பல அதிரடி நடவடிக்கைகளால் பரபரப்புக்கு பஞ்சமின்றி கடந்து முடிவடையவுள்ளது. இந்தச் சூழ்நிலையில், டிரம்ப் பதவிகாலத்தின் 2-வது ஆண்டு வெறும் நிர்வாக ஆண்டாக மட்டுமல்லாமல், அவரது அரசியல் எதிர்காலத்தையும், வரலாற்று புகழையும் தீர்மானிக்கும் ஒரு முக்கிய ஆண்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் முக்கிய அம்சமாக இருப்பது, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் சமாதான முயற்சிதான். ரஷ்யா – உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமெரிக்கா முன்வைக்கும் திட்டம், பல ஐரோப்பிய நாடுகளை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாகச் சில உக்ரைன் பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருப்பதை ஏற்கும் அமெரிக்காவின் நிலைப்பாடு, நேட்டோ விரிவாக்கத்தை நிறுத்தும் யோசனை போன்றவை, அமெரிக்கா இதுவரை பின்பற்றி வந்த வெளிநாட்டு கொள்கைகளுக்கு மாறாக இருப்பதாக விமர்சிக்கப்படுகின்றன.
அதே நேரத்தில், தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலாவுக்கு எதிராக, அமெரிக்க கடற்படை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதியை தடுத்து, அந்நாட்டு அரசை நிதியளவில் பலவீனப்படுத்துவதன் மூலம் அரசியல் மாற்றத்தை உருவாக்கலாம் என்ற நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால், இதனால் அப்பகுதியில் மனிதநேய நெருக்கடிகள் மோசமடைவதுடன், அங்குப் பதற்றமான சூழல் அதிகரிக்கும் என்ற கவலைகளும் எழுந்துள்ளன. இதே காலகட்டத்தில், 2026 FIFA உலக கோப்பை அமெரிக்காவில் நடைபெற இருப்பதும் உலகின் கவனத்தை அந்நாட்டின் மீது திருப்பியுள்ளது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ இணைந்து நடத்தும் இந்த உலகளாவிய கால்பந்தாட்ட தொடர், டிரம்ப் தனது நிர்வாகத்தை நிலைநிறுத்தக் கிடைத்த ஒரு மிகப்பெரிய மேடையாகக் கருதப்படுகிறது.
ஆனால் அந்நாடு ஏற்படுத்தியுள்ள பயண தடைகள், விசா நெருக்கடிகள், டிக்கெட் விலை உயர்வு போன்றவை, சர்வதேச அளவில் அமெரிக்காவிற்கு எதிரான விமர்சனங்களை உருவாக்கியுள்ளன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக வரும் 2026-ம் ஆண்டு நவம்பரில், அங்கு நடைபெறவுள்ள நடுவண் தேர்தல்கள், டிரம்ப் அரசாங்கத்திற்கு உண்மையான அரசியல் சோதனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைக்கு நடத்தப்படும் அந்தத் தேர்தலின் முடிவுகள், அவரது 2-ம் பதவிகாலத்தின் மீதான மக்களின் தீர்ப்பாகப் பார்க்கப்படுகின்றன. இதற்கிடையே தேர்தல் நடைமுறைகள் குறித்த சந்தேகங்கள், அரசியல் பிளவுகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் என எல்லாம் சேர்ந்து தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளன.
இதன் மூலம் வரும் 2026-ம் ஆண்டு அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகத்திற்கு, வெளிநாட்டு பாதைகளை மறுவடிவமைக்கும் முயற்சியாகவும், உள்நாட்டு அரசியல் அதிகார சமநிலையை நிர்ணயிக்கும் காலகட்டமாகவும் உருவெடுக்கவுள்ளன. பல திருப்புமுனைகளை சந்திக்கவுள்ள இந்த ஆண்டில், அதிபர் டிரம்ப் மேற்கொள்ளவுள்ள தீர்மானங்களே அவரது அரசியல் வலிமையையும், அவரது ஆட்சியின் வரலாற்று மதிப்பீடும் எப்படி இருக்கப்போகிறது என்பதையும் தீர்மானிக்க உள்ளன.
















