கடுமையான வாதங்களும், பரபரப்பான மோதல்களும் நிறைந்த குளிர்கால கூட்டத்தொடரின் முடிவில், மக்களவை சபாநாயகர் ஏற்பாடு செய்த பாரம்பரிய தேநீர் விருந்து, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே சிரிப்பும், நல்லிணக்கமும் மலர்ந்த தருணமாக அமைந்தது. இது குறித்த செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரின்போது, உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக விவாதித்து கொண்டனர். சில நேரங்களில் உரையாடல்கள் கடுமையான வாதங்களாக மாறிக் கூட்டத்தொடரையே பரபரப்பாக்கியது. ஆனால் அமர்வின் முடிவில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்பாடு செய்திருந்த பாரம்பரிய தேநீர் விருந்து, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே பல சிறப்பான தருணங்களை ஏற்படுத்தின.
பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்ற இந்தத் தேநீர் விருந்தில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, திமுக எம்.பி ஆ.ராசா, சமாஜ்வாதி கட்சி எம்.பி தர்மேந்திர யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி சுப்ரியா சுலே, சிபிஐ தலைவர் டி.ராஜா உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது நடந்த கலந்துரையாடலில் பிரியங்கா காந்தி, தனது தொகுதியான வயநாட்டில் இருந்து கொண்டுவரும் ஒரு விசேஷ மூலிகையை அலர்ஜிக்காகப் பயன்படுத்துவதை பகிர்ந்து கொண்டார்.
அதைக்கேட்ட பிரதமர் மோடியும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் புன்னகைத்தபடி, அவரிடம் அதுகுறித்து கேட்டறிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பிரியங்கா காந்தி, பிரதமர் மோடியின் ஜோர்டான், எத்தியோபியா மற்றும் ஓமன் பயண அனுபவங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இதற்கிடையே சமாஜ்வாதி கட்சி எம்.பி-யான தர்மேந்திர யாதவ், அமர்வை இன்னும் சில நாட்கள் நீட்டித்திருக்கலாம் என கூறினார். அதற்குப் பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, தர்மேந்திர யாதவ் மிகவும் சத்தமாகப் பேசுபவர் என்பதை குறிப்பிட்டு, அமர்வு நீண்டால் அவரது தொண்டைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அதனை தவிர்த்துவிட்டதாகக் கிண்டலடித்தார். அதே நேரத்தில், புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் எல்லா எம்.பி-க்களும் அமர்ந்து பேச ஒரு மைய மண்டபம் அமைக்கலாம் என்ற யோசனை வந்தபோது, அது ஓய்வுபெற்றபின் பயன்படுத்திக்கொள்வதற்காக எனப் பிரதமர் மோடி நகைச்சுவையாகப் பேசியது அங்குச் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தேநீர் விருந்தின் இறுதியில் அமர்வில் சிறப்பாகச் செயல்பட்டதாகச் சில எதிர்க்கட்சி எம்.பி-க்களை, பிரதமர் மோடி பாராட்டிப் பேசியதும் அனைவர் மத்தியிலும் கவனம் பெற்றது. முந்தைய நாடாளுமன்ற அமர்வின்போது ராகுல் காந்தி உள்ளிட்ட சில எதிர்க்கட்சி தலைவர்கள், சபாநாயகர் நியாயமாக நடக்கவில்லை எனக்கூறி அவர் ஏற்பாடு செய்த தேநீர் விருந்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
ஆனால் தற்போதைய குளிர்கால அமர்வில் அந்த நிலைபாடு மாறி, அனைத்து எதிர்க்கட்சிகளும் பாரம்பரிய தேநீர் விருந்தில் கலந்துகொண்டனர். இந்த முடிவிற்கு காங்கிரஸ் கட்சி தலைமையேற்றது என்பதையும் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உறுதிபடுத்தினார்.
மொத்தத்தில், கடுமையான அரசியல் மோதல்களுக்கிடையிலும், இந்தப் பாரம்பரிய விருந்து நாடாளுமன்ற நல்லிணக்கத்தின் ஒரு சின்னமாக அமைந்தது என்பதை மறுப்பதற்கில்லை.
















