அசாமில் பிரதமர் மோடி திறந்துவைத்த கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம், வட-கிழக்கு இந்தியாவின் விமான சேவைகளுக்குப் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காண்லாம்.
அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தில், புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இது வட-கிழக்கு மாநிலங்களுக்கு விமான பயணத்தில் புதிய அத்தியாயமாக உருவெடுத்துள்ளது. நான்காயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த முனையம், “BAMBOO ORCHIDS” என அழைக்கப்படுவதுடன், இயற்கையை மையமாகக்கொண்ட நாட்டின் முதல் விமான முனையமாகவும் அமைந்துள்ளது.
1.4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த முனையத்தின் புதிய கட்டடம் ஆண்டுக்கு ஒரு கோடியே 30 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டது எனவும், மேம்படுத்தப்பட்ட ரன்வே வசதிகள் மூலம் இது ஒரு மணி நேரத்திற்கு 34 விமானங்கள் வரை கையாளும் திறன் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முனையம் வட-கிழக்கு இந்தியாவின் பாரம்பரியக் கலையையும், இயற்கை அழகையும் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டடத்தில் கையாளப்பட்டுள்ள 140 டன் மூங்கில்கள், கலைமிகு உட்கட்டமைப்புக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. 57 காபோப் பூ தூண்கள், காசிரங்கா தேசிய பூங்காவின் வனச் சின்னங்கள், ஜாபி நுட்பங்கள், மஜூலி தீவின் பாரம்பரிய அம்சங்கள் போன்றவையும் பயணிகளை கவரும் வகையில் உள்ளன.
அதேபோல, பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி முனையத்திற்குள் வரும் தருணத்தில் “SKY FOREST” எனப்படும், வன அமைப்புச் சூழலை அவர்கள் அனுபவிக்க முடியும். ஒரு லட்சம் உள்ளூர் தாவரங்களை உள்ளடக்கிய அப்பகுதி பயணிகளுக்குக் காற்றழுத்தம் குறைந்த, இயற்கை சார்ந்த அமைதியான அனுபவத்தை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், கவுகாத்தியில் திறக்கப்பட்டுள்ள புதிய விமான முனையம் வட-கிழக்கு இந்தியாவின், விமான சேவைகளுக்கு புதிய தரநிலையை ஏற்படுத்தும் முக்கிய மையமாக உருவாகியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
















