அமெரிக்க வெளிவுறவுத்துறையின் புதிய சமூக ஊடக ஆய்வு விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் H-1B விசாவிற்கான நேர்காணல்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், வெளிநாட்டு பயணங்களைத் தவிர்க்குமாறு தங்களது ஊழியர்களுக்குக் கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் திறமையுள்ள வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் பணியாற்ற H-1B விசா வழங்கப்படுகிறது. இந்த விசா திட்டத்தில் மூலம், குறைந்த ஊதியத்துக்குத் திறமையானவர்களை வெளிநாடுகளில் இருந்து பணியமர்த்துவதால் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் போகிறது எனக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், H-1B விசா கட்டணத்தைச் சுமார் 88 லட்சம் ரூபாயாக உயர்த்தினார். மேலும், H-1B விசா உட்பட பிற அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களுக்கு சமூக ஊடக சோதனைகளைக் கட்டாயமாக்கியுள்ளது. இதன்படி, H-1B விசா விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கட்டாய ஆன்லைன் இருப்பு (online presence) மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும், இந்தக் கடுமையான சோதனை F, M மற்றும் J விசா கோருபவர்களுக்கும் நீட்டிக்கப்படும் என்றும், அவர்களும் தங்கள் சமூக ஊடக சுயவிவரங்களை (profiles) பொதுவில் பகிர வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தேசிய பாதுகாப்பு சோதனை செயல்முறையை அறிவித்துள்ளது.
குறிப்பாகத் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை அடையாளம் காண இந்த நடவடிக்கை அவசியம் என்று கூறியுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை, விசா என்பது ஒரு முக்கியமான தேசிய பாதுகாப்பு முடிவு என்றும், விண்ணப்பதாரர்கள் அமெரிக்க நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த கடுமையான சோதனைகள் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இந்தப் புதிய விதிமுறை, நடைமுறையில் இருக்கும் அமைப்பு ரீதியான சரிபார்ப்பு என்பதிலிருந்து தன்னிச்சையாக முடிவெடுக்கும் நிலைக்கு மாற்றுவதால், விசா நிராகரிப்புகள் மேல்முறையீடு செய்ய முடியாதவை என்று குடியுரிமை நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். புதிய விதிமுறையில், தூதரக அதிகாரிகளின் பங்கு அதிகம் என்பதால், ஏற்கெனவே சரிபார்க்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் அவர்களின் கடந்தகால சமூக ஊடக பதிவுகளின் காரணமாக விசா நிராகரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், முக்கிய விண்ணப்பதாரர் மற்றும் அவரைச் சார்ந்திருப்பவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தனித் தனியே சமூக ஊடக சோதனைகள் நடத்தப்படுவதால், விண்ணப்பதாரரின் விசா நிராகரிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாகப் புதிய சமூக ஊடகச் சரிபார்ப்புக் கொள்கை காரணமாக நேர்காணல்கள் ரத்து செய்யப்படுவதாக விண்ணப்பித்தாரர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறையில் இருந்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நேர்காணல் தேதியில் தூதரகத்துக்கு வரும் எந்தவொரு விசா விண்ணப்பதாரருக்கும் அனுமதி மறுக்கப்படும் என்று இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.
பெரும்பாலும் H-1B விசா திட்டத்தையே அதிகம் சார்ந்துள்ள இந்தியாவின் IT மற்றும் சேவைத் துறை, இக்கொள்கையால் கடும் சவால்களை எதிர்கொள்ளக்கூடும் என்றும், அத்துறைகளின் வளர்ச்சியையும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே, கூகுள், ஆப்பிள் போன்ற முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று எச்சரித்துள்ளன. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அறிக்கையின்படி, மொத்த H-1B விசா தாரர்களில் 71 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
















