பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் இருந்து மாயமான ட்ரம்பின் புகைப்படத்தை மீட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. புதியதாக வெளியிடப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் புகைப்படங்களின் தொகுப்பில் முன்னாள் பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூவின் பிரத்யேக புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்க நாடாளுமன்றம் கொண்டு வந்த Epstein Files Transparency Act என்ற சட்டத்தின் படி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் பல்லாயிரக்கணக்கான ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்காக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. ஆனால், பதிவேற்றம் செய்யப்பட்ட மறுநாளே, அதில் இருந்த 16-க்கும் மேற்பட்ட Files நீக்கப்பட்டிருந்தது.
நீக்கப்பட்ட File-களில் மிக முக்கியமானது ‘File 468’ என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு புகைப்படமாகும். டொனால்ட் ட்ரம்ப், மெலனியா டிரம்ப், ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் கிஸ்லைன் மேக்ஸ்வெல் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் தான் ‘File 468’-ல் இருந்தது. மேலும், ட்ரம்ப் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர், பிகினி உடையில் இருக்கும் இளம்பெண்களுடன் இருக்கும் மற்றொரு புகைப்படமும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பதிவேற்றப்பட்ட 24 மணி நேரத்துக்குள் இந்தப் புகைப்படங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி நீக்கப்பட்டுள்ளது சர்ச்சைக்கு வழிவகுத்தது. இது வெறும் தொழில்நுட்பப் பிழையா அல்லது ஒரு குறிப்பிடத் தக்க உண்மையை மறைக்கும் முயற்சியா என்ற கேள்விகள் எழுப்பப் பட்டன. குறிப்பாக, 119 பக்கங்கள் கொண்ட ஒரு ஆவணம் முழுவதும் மறைக்கப்பட்டிருப்பது அமெரிக்க வரலாற்றில் நடந்த மிகப்பெரிய மறைப்பு வேலை எனச் செனட் தலைவர் சக் ஷுமர் விமர்சித்தார். அமெரிக்காவின் ஹவுஸ் ஓவர்சைட் கமிட்டியும் (House Oversight Committee) கண்டனம் தெரிவித்திருந்தது.
நீதித்துறையின் இந்த நடவடிக்கைக்கு ஜனநாயகக் கட்சியினரே கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உள்ளிட்ட பல முக்கியப் பிரபலங்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், ட்ரம்பின் புகைப்படங்கள் மட்டும் நீக்கப்பட்டது அரசியல் ரீதியாகப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நீக்கப்பட்ட ட்ரம்பின் புகைப்படம் மீட்கப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. அதிபர் ட்ரம்ப் இடம்பெற்றிருந்த புகைப்படம், பாதிக்கப்பட்டவர்களைப் பொதுவெளியில் அம்பலப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தாது என்று முடிவு செய்யப்பட்டபிறகே மீட்டெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, அதிபருக்கும் இந்த நீக்கத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திய அமெரிக்க துணை அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச், பாதிக்கப்பட்டோர் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கையின் பேரிலேயே 16 படங்கள் நீக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். வெளியிடப்பட்ட ஆவணங்களில், முன்னாள் பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ இருக்கும் புகைப்படங்கள், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நோர்ஃபோக்கில் உள்ள இங்கிலாந்து மன்னரின் தனிப்பட்ட ஓய்வு இல்லமான சாண்ட்ரிங்ஹாமில் உள்ள வரவேற்பறைக்குள் எடுக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ, நேர்த்தியாக உடையணிந்த ஐந்து பெண்களின் மடியில் படுத்திருக்க, அருகிலேயே ஜெப்ரி எப்ஸ்டீனின் பாலியல் குற்றங்களுக்குத் துணை நின்ற கிஸ்லைன் மேக்ஸ்வெல் நிற்கும் புகைப்படம் அரச குடும்பத்துடனான ஜெப்ரி எப்ஸ்டீனின் நெருக்கத்தை வெளிக்காட்டுகிறது.
குறிப்பாக, அந்தப் புகைப்படத்தில் கருப்பு நிற சூட் மற்றும் டை அணிந்த ஆண்ட்ரூவின் முகம் பெண்களில் ஒருவரின் கால்களுக்கு அருகில் இருக்க, எதிரே நிற்கும் மேக்ஸ்வெல்லும் அதைப் பார்த்து சிரிக்கிறார். சாண்ட்ரிங்ஹாமில் உள்ள இந்த வரவேற்பறை பாரம்பரியமாகப் பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரால் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மதிய நேரத் தேநீர் சந்திப்புகளுக்கும், கிறிஸ்துமஸ் தினத்தன்று குடும்ப உறுப்பினர்கள் மன்னரின் முன்கூட்டியே பதிவுசெய்யப்பட்ட கிறிஸ்துமஸ் உரையைப் பார்ப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
புகைப்படங்களுடன் உள்ள தகவல்களின்படி, புகைப்படம் 2000ம் ஆண்டு டிசம்பர் மாத கடைசியில் எடுக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது. அதே ஆண்டு மேக்ஸ்வெல்லின் 39வது பிறந்தநாளும் வந்தது என்பது குறிப்பிடத் தக்கது. எப்ஸ்டீன் மற்றும் வர்ஜீனியா கியூஃப்ரேவுடனான தொடர்புகள் அம்பலமானதைத் தொடர்ந்து, வின்ட்சரில் உள்ள ராயல் லாட்ஜை விட்டுக் கடந்த அக்டோபர் மாதம் ஆண்ட்ரூ வெளியேற்றப்பட்டார்.
ஜூன் 2000ம் ஆண்டு ஜூன் மாதம் ஆஸ்காட்டில் உள்ள ராயல் பாக்ஸில் நடந்த லேடீஸ் டே விழாவில் ஆண்ட்ரூ, எப்ஸ்டீன் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் ராணியின் தாயாரும் கலந்துகொண்டதும் அரச குடும்பத்துடன் எப்ஸ்டீன் மற்றும் மேக்ஸ்வெல்லுக்கு இருக்கும் தொடர்பைக் காட்டுகிறது.
பால்மோரலின் புல்வெளி பகுதிகளில் துப்பாக்கிச் சுடும் நிகழ்வில் ஆண்ட்ரூவுடன் எப்ஸ்டீன் மற்றும் மேக்ஸ்வெல் இருக்கும் புகைப்படமும், 10 டவுனிங் தெருவுக்கு வெளியே கில்லேன் மேக்ஸ்வெல் நிற்கும் ஒரு புகைப்படமும் பக்கிங்ஹாம் அரண்மனையின் உள்ளே உள்ள சிம்மாசனங்களில் மேக்ஸ்வெல் மற்றும் நடிகர் கெவின் ஸ்பேசி அமர்ந்திருக்கும் புகைப்படமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 2010-ல் எப்ஸ்டீனுடன் தனது தொடர்பை முறித்துக்கொண்டதாக ஆண்ட்ரூ வலியுறுத்தி வந்தாலும், புகைப்படங்களும் மின்னஞ்சல்களும் அவரது தொடர்பை உறுதிப்படுத்தியுள்ளன. ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்களில் இன்னும் என்னென்ன அதிர்ச்சிகள் வெளிவர உள்ளதோ என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
















