தற்சார்பு இந்தியா எனும் நமது முழக்கத்தின் அடுத்த கட்டத்திற்கு இஸ்ரோ சென்றுள்ளதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து காலை 8.55 மணிக்கு பாகுபலி ராக்கெட் மூலம் புளூபேர்ட்- 6 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் 6 ஆயிரத்து 100 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை முதன் முதலாக வெற்றிகரமாக விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.
இது தொலைதுார கிராமங்களுக்கு மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், புளூபேர்ட் பிளாக் – 2 தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக தெரிவித்தார். அமெரிக்காவின் முதல் பிரத்யேக வணிக ரீதியான செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
எல்எம்வி-3 ராக்கெட் மூலம் இதுவரை 9 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளதாகவும், இந்திய ராக்கெட் மூலம் இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்ட புளூபேர்ட்- 6 செயற்கைக்கோள் மிக கனமானது எனவும் குறிப்பிட்டார். மேலும், எல்எம்வி-3 ராக்கெட், அதன் 100 சதவீத நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளது எனவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், இந்திய ராக்கெட் மூலம் அமெரிக்க செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வணிக ரீதியில் ராக்கெட்டுகளை ஏவுவதில், உலக சந்தையில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ளதாக தெரிவித்தார். விண்வெளித்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எனக்கூறியுள்ள பிரதமர் மோடி, விண்வெளி உலகில் இந்தியா தொடர்ந்து உயரப் பறப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
















