பொங்கல் திருநாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதையொட்டி பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
தமிழகத்தில் மண்பாண்ட பொருட்கள் என்றாலே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரைக்கென்று தனி இடம் உண்டு. அப்படிப்பட்ட மண்பாண்ட பொருட்களுக்கு அன்மையில் புவிசார் குறியீடும் வழங்கப்பட்டது. வைகையாற்றின் ஓரத்தில் கிடைக்க கூடிய களிமண்ணை பயன்படுத்தி பாரம்பரிய தயாரிப்பு முறையால் இந்த மண்பாண்ட பொருட்கள் தயாரிக்கப்படுவதாலேயே அவற்றுக்கெனத் தனி இடம் உண்டு.
தமிழகத்தில் தனி மதிப்பும் உண்டு. இந்த நிலையில்தான் தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை சில நாட்களிலேயே வரவுள்ளதால் அதற்காகப் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மானாமதுரையில் பண்பாண்ட தயாரிப்பு தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டுவருவதுடன் பொங்கல் பானை, அகல்விளக்கு, மண் அடுப்பு, பூச்சாடி, மண் கலையம் எனப் பல்வேறு மண்பாண்ட பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.
இப்படி பல்வேறு மண்பாண்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டாலும் ஒரு குழுவினர் ஒரு வகையான பொருளை மட்டுமே தயாரிக்க முடியும். அப்படி அவர்களுக்குள் ஒரு கட்டுப்பாடு உண்டு. அந்த வகையில் பொங்கல் பானை தயாரிப்பு குழுவினர் தற்போதுஅந்தப் பானைகளை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அரசின் அனுமதியுடன் களிமண் எடுத்துவந்து அதில் குறிப்பிட்ட அளவு இதர மண் வகைகளை சேர்த்து பானை செய்வதற்கு ஏற்றார்போல் பதப்படுத்துகின்றனர். பின்னர் சக்கரத்தில்வைத்துச் சுற்றி மண்பானை உருவத்திற்கு வடித்து தருகின்றனர். அதனை பெண்கள் அமர்ந்து மரப்பலகையால் தட்டி, தட்டி பானை உருவம் செய்து பின்னர் வெயிலில் காயவைக்கின்றனர். அவற்றின் மீது செம்மன் வண்ணம் பூசி பின்னர் உலர்த்தி நெருப்பு சூளையில்வைத்துச் சுட்டு விற்பனைக்கு அனுப்புகின்றனர். பொங்கல் சீசனின் போது மட்டும் 5 ஆயிரம் பானைகள் முதல் 7 ஆயிரம் பானைகள் வரை தயார் செய்கின்றனர்.
மன்பாண்ட தயாரிப்பாளர் கூட்டுறவு சங்கத்திற்கு ஒரு பானை இத்தனை ரூபாய் விலை என நிர்ணயித்து அனுப்புகின்றனர். அவற்றை வாங்கும் சங்கத்தினர், வியாபாரிகளிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை கூடுதலாக வைத்து விற்கின்ற நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காகஎடுத்துச் செல்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இன்னும் பாரம்பரியம் மாறாமல் மண்பானையில் பொங்கல் வைக்கும் பழக்கம் உள்ளதால் பொங்கல் பானைகளுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. நீண்ட நாள் உழைப்பில் தயாராகும் இந்த மண்பானைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவற்றை வாங்கி பொங்கல்பண்டிகைக்குத் தித்திக்கும் கரும்புடன் பொங்கல் வைக்கலாம். இதனால் நமக்கு மட்டுமின்றி தொழிலாளர்களின் வாழ்க்கையும் கரும்பாக இனிக்கும் என்பது உண்மைதானே.
















