ஆப்ரேஷன் சிந்தூர் 2.0 மூலம் இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என அஞ்சும் பாகிஸ்தான் ராணுவம் எல்லையோர பகுதிகளில் புதிய ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்புகளை அமைத்து வருகிறது.இதுபற்றியய ஒரு செய்தி தொகுப்பு.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா தொடங்கிய ஆப்ரேஷன் சிந்தூரில் ஹார்பி மற்றும் ஹரோப் ஆளில்லா ட்ரோன்களை மட்டுமின்றி, Warmate, SkyStriker, மற்றும் Nagastra ஆகிய வியூக ட்ரோன்களையும் பயன்படுத்தியது. போரை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியதைத் தொடர்ந்து ஆப்ரேசன் சிந்தூர் தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டது. ஆனாலும், இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் தொடர்ந்து அசிம் முனீர் தலைமையிலான பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.
கடந்த அக்டோபர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர்.இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது இருப்பது விசாரணையில் தெரியவந்தது. வெறும் முன்னோட்டமான ஆப்ரேஷன் சிந்தூர் 88 மணி நேரத்தில் முடிந்துவிட்டது என்றும், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தைநிறுத்திக் கொள்ளாதத பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருந்தே காணாமல் போகும் என்று இந்திய ராணுவத் த் தலைமை தளபதி ஜெனரல் உபந்திர திவேதி கடுமையாக எச்சரித்திருந்தார்.
மேலும், ‘ஆப்ரேஷன் சிந்தூர் 2.0 இந்திய இராணுவம் தீவிரமாகத் தயாராகி வருவதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படியே முப்படைகளின் ஒருங்கிணைந்த போர் ஒத்திகைகள் மற்றும் தீவிரமான போர்ப் பயிற்சிகள் நடைபெற்றுவருகின்றன. பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் பிரம்மோஸின் எல்லைக்குள் உள்ளது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்திருந்தார்.
இவையெல்லாம் பாகிஸ்தானுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட பிரத்யேக ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்புகளை பாகிஸ்தான் ராணுவம் நிலைநிறுத்தியுள்ளது. முர்ரியின் 12வது காலாட்படைப் பிரிவு மற்றும் கோட்லி-பிம்பர் பகுதியில் உள்ளபடைப்பிரிவுகளைக் கட்டுப்படுத்தும் 23வது காலாட்படைப் பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ரஜோரி, பூஞ்ச், நௌஷேரா மற்றும் சுந்தர்பனி ஆகிய இடங்களில் 2வது ஆசாத் காஷ்மீர் படைப்பிரிவும், கோட்லியில் 3வது ஆசாத் காஷ்மீர் படைப்பிரிவும், பிம்பர் பகுதியில் 7வது ஆசாத் காஷ்மீர் படைப்பிரிவும் ஆளில்லா விமான ட்ரோன் எதிர்ப்பு அமைப்புக்களைக் கையாளுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் நிலைநிறுத்தியுள்ள பாதுகாப்பு அமைப்புகளில், ஸ்பைடர் ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்பு முக்கியமானதாகும். இது சிறிய சுற்றித்திரியும் வெடிமருந்துகள் மற்றும் பெரிய ஆளில்லா விமானங்களை 10 கிலோமீட்டர் தூரம் வரை கண்டறியும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.
மேலும் தோளில் வைத்துச் சுடும் சஃப்ரா ஆளில்லா விமான ஜாமிங் துப்பாக்கியையும் பாகிஸ்தான் பயன்பாட்டில் வைத்துள்ளது. சுமார் 1.5 கிலோமீட்டர் பயனுள்ள வரம்பைக் கொண்ட இந்த துப்பாக்கி, ஆளில்லா விமானக் கட்டுப்பாடு, வீடியோ மற்றும் ஜிபிஎஸ் இணைப்புகளை சீர்குலைக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டதாகும்.
இதுவரை நடந்த பாகிஸ்தான்- இந்தியா போரில் ஒவ்வொரு முறையும் இந்தியாவே வென்றது. பாகிஸ்தான் காஷ்மீரையும் கைப்பற்ற முடியாமல் கிழக்கு பாகிஸ்தான் முழுவதையும் இழந்ததுதான் வரலாறு. நான்கு போர்களிலும், இந்தியா மீது முதல் குண்டுகளை வீசிய பாகிஸ்தான் தோல்வியடைந்து சரணடைவதே வாடிக்கை என்று பாதுகாப்பு வல்லுனர்கள் கூறுகின்றனர்.
















