அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட இடைநிலை தூர நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணையான K-4 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அணுசக்தி நாடுகளிலேயே சீனாவும், இந்தியாவும் மட்டும் தான் முதலில் அணுசக்தியைப் பயன் படுத்துவதில்லை என்ற கொள்கையை வைத்துள்ளது. அதற்காக இந்தியா அணுசக்தி திறனை மேம்படுத்தாமல் இல்லை. ஆனால்,எதிரி முதலில் அணுசக்தியால் தாக்கினால், திருப்பித் தாக்கும் ஆற்றலைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
இதற்காக இந்தியாவின் ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த நாட்டின் ஏவுகணை நாயகனும் முன்னாள் குடியரசு தலைவருமான ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கே-தொடர் ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது. சமீபத்தில், தனது அணுசக்தித் திறனைப் பறைசாற்றும் விதமாக, அணுசக்தித் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஒரு நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
ஐஎன்எஸ் அரிஹந்த் மற்றும் ஐஎன்எஸ் அரிகட் இதில் எந்த நீர்மூழ்கிக் கப்பல் எந்த ஏவுதலை நடத்தியது என்பது அதிகாரப் பூர்வமாகஅறிவிக்கப் படவில்லை என்றாலும் புதிய கே-4 ஏவுகணை, வங்காள விரிகுடாவில் விசாகப்பட்டினம் கடற்கரைக்கு வெகுதொலைவில் ஐஎன்எஸ் அரிஹாட் என்ற அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
3,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கே-4 ஏவுகணை, இந்தியாவின் கடல்சார் அணுசக்தித் திறனுக்கு ஒரு பெரும் சான்றாக உள்ளது. இதில் 2.5 டன் எடையுடன் கூடிய அணுகுண்டை சுமந்து செல்ல முடியும் என்பது குறிப்பிடத் தக்கது. இப்போது நடத்தப் பட்டிருக்கும் கே-4 சோதனை இந்தியாவின் இரண்டாவது சோதனையாகும். ஏற்கெனவே நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணையான கே-4, 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டது.
இதன் மூலம், தரை, வான் மற்றும் கடலுக்கு அடியிலிருந்து அணு ஆயுத ஏவுகணையைச் செலுத்தக்கூடிய ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றது. இந்தியாவிடம் தற்போது ஐஎன்எஸ் அரிஹந்த் மற்றும் ஐஎன்எஸ் அரிகட் ஆகிய இரண்டு செயல்பாட்டில் உள்ள அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன, மேலும் இரண்டு கப்பல்கள் கடல் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
அக்னி-III தரைவழி ஏவுகணையிலிருந்து உருவாக்கப்பட்ட கே-4ஏவுகணை நாட்டின் மிக அதிக தூரம் செல்லக்கூடிய கடல்வழி ஏவப்படும் ஏவுகணையாகும். தரையில் இருந்து ஏவுப்படும் ஏவுகணையில் இருந்து கடலில் இருந்து செலுத்துவதற்காக பிரத்யேகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பாலிஸ்டிக் அணுசக்தித் திறன் கொண்ட நீர்மூழ்கிகப்பல் ஒரு உச்சகட்ட இரகசிய வேட்டைக்கான கப்பலாகும். தரைவழி ஏவுதளங்களைப் போலல்லாமல் செயற்கைக்கோள்களுக்குப் புலனாகாமல், ரேடார்களால் கண்டுபிடிக்க முடியாத வகையில் கடலுக்கு அடியில் ஆழத்தில் பதுங்கி நிற்கும். கடலின் ஆழத்தில் மறைந்து இருக்கும் இந்தக் கப்பல், பல ஆண்டுகளுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு அணு உலை மூலம் இயங்கும்.
மெதுவாக நகரும். காலவரையின்றி நீருக்கடியில் இருக்கும். நீர்மூழ்கிக் கப்பலின் பணியாளர்களின் சகிப்புத்தன்மை மற்றும் உணவுப் பொருட்கள் மட்டுமே அத்தியாவசியமானது. இந்தியாவின் அனைத்து நிலத்தடி ஏவுகணைத் தளங்களையும் விமானத் தளங்களையும் அழிக்கும் அளவுக்குப் பேரழிவு தரும் அணுசக்தித் தாக்குதல்களில் கூட, ஆழ்கடலில் பதுங்கியிருக்கும் இந்த நீர்மூழ்கிக் கப்பல், பதிலுக்கு எதிர்ப்பார்க்காத கடுமையான தாக்குதலை நடத்தும்.
இது, இந்தியாவுக்கு எதிரான முதல் அணுசக்தி தாக்குதலை எந்த நாடு நடத்தினாலும், அது அந்நாட்டின் தற்கொலைக்குச் சமம் என்பதை உறுதி செய்கிறது. தற்போது இந்தியாவிடம் INS அரிஹந்த் மற்றும் INS அரிகாட் ஆகிய அணுசக்தியால் இயங்கும் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் சேவையில் உள்ளன. சோதனையில் இருக்கும் அணுசக்தியால் இயங்கும் மூன்றாவது நீர்மூழ்கி கப்பலான INS அரிதமன் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கடற்படையில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, இன்னும் பெயரிடப்படாத நான்காவது கப்பலும் விரைவில் கடற்படையில் இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தப் பேரழிவு நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்று எல்லா நேரங்களிலும் கடலில் இருக்கும். தனது ஆயுதங்களுடன் ரோந்துப் பணியில் இன்னொரு கப்பல் எப்போதும் சுற்றி வரும். பயிற்சிக் கப்பலாக ஒன்று செயல்படும். நான்காவது கப்பல் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பில் இருக்கும். இதற்கிடையே கே-4 க்குப் பிறகு கே-5 மற்றும் கே-6 ஏவுகணைகளை DRDO உருவாக்கி வருகிறது.
இந்த ஏவுகணைகள் 5,000 கிலோமீட்டர் தூரத்துக்கும் அப்பால் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு ஏற்றாற் போல் இனி உருவாக்கப் போகும் எஸ்5 என்ற நீர்மூழ்கிக் கப்பல்கள், அரிஹந்த் வகுப்பை விட இரு மடங்கு பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலுக்கடியில் யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் மறைந்து இருக்கும் இந்த பெரும் யானைகள், தேசத்தை எதிரிகளிடமிருந்து காப்பாற்ற ஒரு கட்டளைக்காகக் காத்திருக்கின்றன.
















