சர்வதேச அளவில் எட்டு போர்களைத் தடுத்து நிறுத்திய போதிலும் தமக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என இஸ்ரேல் பிரதமர் நெதயன்யாகு உடனான சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் புலம்பி இருக்கிறார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மார்-எ-லாகோ மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது அதிபர் ட்ரம்ப், தனது இரண்டாவது பதவி காலத்தின் முதல் ஆண்டில் மட்டும் 8 போர்களைநிறுத்தியுள்ளதாகப் பெருமை பேசியுள்ளார்.
நீண்டகால போர்களை முடிவுக்குக் கொண்டுவந்த தனக்கு உரிய அங்கீகாரம்கூடக் கிடைக்கவில்லை என்றும் தனது ஆதங்கத்தைவெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். பிரதமர் நெதன்யாகு தலைமையிலான தூதுக்குழுவினருடன் ட்ரம்ப் நடத்திய இருதரப்பு சந்திப்பின் வீடியோவில் இது தெளிவாகப் பதிவாகியுள்ளது.
அதில், இராஜதந்திரமாக இத்தனை போர்களை நிறுத்தியதும், தனக்கு நோபல் அமைதிப் பரிசு தரப்பட வில்லை என்று விரக்தியுடன் ட்ரம்ப் பேசுவது பரிதாபமாக உள்ளது.
ஆர்மேனியா மற்றும் அஜர்பைஜான் இடையிலான போரை நிறுத்தவில்லை என்றால் அந்த நாடுகள் மீது 200 சதவீதம் வரியும் வர்த்தக தடையும் விதிக்கப்படும் என்று தான் மிரட்டியதாகவும், அதனாலேயே 35 ஆண்டுகளாக நீடித்த போர் உடனடியாக முடிவுக்கு வந்தததாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதை ரஷ்ய அதிபர் புதின் தம்மிடம் ஆர்மேனியா மற்றும் அஜர்பைஜான் போரைத் தீர்த்து வைத்ததை நம்ப முடியவில்லை என்று கூறியதாகவும், 10 ஆண்டுகளாக முயற்சி செய்தும் தம்மால் முடியாததை ஒரே நாளில் தீர்த்து வைத்ததாக அவர் கூறியதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தெற்காசியாவைப் பொறுத்தவரை, இந்தியா பாகிஸ்தான் போரை மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். கடந்த மே மாதம் பத்தாம் தேதி, முதல் நாள் இரவு நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும்உடனடியாகப் போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் தனது TRUTH SOCIAL பக்கத்தில் பதிவிட்டார்.
பாகிஸ்தான் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்றும், இதில் மூன்றாவது நாட்டின் அல்லது மூன்றாவது நபரின் தலையீடு இல்லை என மத்திய அரசு தெளிவாக அறிவித்துள்ளது.
மேலும், ஆப்ரேஷன் சிந்துாரை நிறுத்துமாறு எந்த உலகத் தலைவரும் இந்தியாவைக் கேட்கவில்லை என்றும் தற்காலிக போர் நிறுத்த முடிவுகள் சுதந்திரமாக எடுக்கப்பட்டன என்றும் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தெளிவு படுத்தி இருந்தார். இந்நிலையில், 70வது முறையாக இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக மீண்டும் ட்ரம்ப் கூறியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.
















